×

பெரியகுளம் அருகே கல் வீச்சு சம்பவம் தொடர்பாக இருதரப்பினரிடையே அமைதி பேச்சு வார்த்தை

பெரியகுளம், ஜூன் 27: பெரியகுளம் அருகே கல்வீச்சு சம்பவத்தில் எஸ்.பி.உட்பட 13 போலீசார் காயம் அடைந்த சம்பவம் தொடர்பாக லெட்சுமிபுரம் மற்றும் சருத்திபட்டி கிராம மக்களிடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தைச் சேர்ந்த முரளி, சருத்துப்பட்டி மக்களிடையே பிரச்னை ஏற்பட்டது. இதுதொடர்பாக இரு கிராமத்தினரும் மோதிக்கொண்டனர்.இதைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு இரவில் 200க்கும் மேற்பட்டோர் தேனி-பெரியகுளம் சாலையில் பஸ் மறியலில் ஈடுபட்டனர். தேனி எஸ்பி பாஸ்கரன் தலைமையில் அதிரடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கூடியிருந்த மக்கள் திடீரென போலீசார் மீது கற்கள் வீசியும், ஆயுதங்களால் தாக்கினர். இதில் எஸ்பி பாஸ்கரன் மற்றும் 14 போலீசார் காயமடைந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து சருத்துப்பட்டி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து இப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இச்சம்பவத்தில் தொடர்புடைய சருத்திபட்டியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து 11 பேரை கைது செய்தனர். இந்நிலையில் இரு கிராமத்தினரிடையே பெரியகுளம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் ஜெயப்பிரித்தா தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது.பெரியகுளம் டி.எஸ்.பி.ஆறுமுகம், தாசில்தார் சுந்தர்லால் உட்பட லெட்சுமிபுரம் மக்கள் சார்பாக கார்த்திகேயன், கேசவன், ராமநாதன், சருத்திபட்டி மக்கள் சார்பாக முத்துராஜ், காளிதாஸ் உட்பட இரு கிராமமக்கள் சார்பில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்டி முடிவுகள்: மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சருத்திபட்டி மக்களுக்கு வியாபாரிகள் தர மறுக்கின்றனர். அவைகளை தடையின்றி தர வழிவகை செய்ய வேண்டும். லட்சுமிபுரம் கிராமத்தைச்சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள இளைஞர்கள் லெட்சுமிபுரம் மெயின் ரோட்டில் பைக் ரேசில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் லெட்சுமிபுரம இளைஞர்கள் மீது பழி ஏற்படுகிறது. பைக் ரேசில் ஈடுபடுபவர்கள் மீது காவலத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜல்லிபட்டியில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக்கடை ஒதுக்குப்புறமாக இருப்பதால் அங்கு மது அருந்த வருபவர்களால் பிரச்னை ஏற்படுகிறது. அந்த டாஸ்மாக் கடையை வேறு ஊருக்கு மாற்ற இரு கிராம மக்களும் கோரிக்கை வைத்தனர்.

இந்த பிரச்னையில் துறை ரீதியான நடவடிக்கை எடக்கப்படும் என்று வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் போக மீதியுள்ள 36 பேர் நீதிமன்றத்தில் ஆஜராவார்கள். எனவே காவல்துறையினர் சருத்திப்பட்டி கிராமத்தை விட்டு செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களை போலீசார் பிடித்தபோதும், அவர்களாகவே சரணடைந்தபோதும் 30 பேர் விசாரணைக்குப்பின் விடுவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
எனவே மீதமுள்ள நபர்களை சரணடைய செய்யும் பட்சத்தில் மட்டுமே காவல்துறையினர் சருத்திபட்டி கிராமத்தை விட்டு வெளியேறுவர் என்று வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினாரால் தெரிவிக்கப்பட்டது.இரு ஊர் சார்பாக 10 பேர் கொண்ட கமிட்டி அமைத்து எந்தவொரு பிரச்னை என்றால் கமிட்டி பேசி தீர்த்துக்கொள்வது என்றும், முடிவு எட்டாத பட்சத்தில் இரு கமிட்டியினரும் இணைந்து காவல்துறையினர் வசம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க தெரிவிக்க வேண்டும். வழக்குப்பதிவு செய்யப்பட்ட மீதியுள்ள 36 பேரை கிராமத்தின் சார்பாக ஒப்படைக்க வேண்டும். இல்லையென்றால் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளும். அதுவரை கிராமத்தை விட்டு காவல்துறை வெளியே செல்லாது என காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு முடிவுகள் எடுக்கப்பட்டது.

Tags :
× RELATED இடுக்கியில் இன்று பிரசாரம் நிறைவு