×

திருப்பாலைக்குடியில் தெருவிளக்கு எரியாமல் எங்கும் இருள்மயம் திருட்டு அச்சத்தில் மக்கள்

ஆர்.எஸ்.மங்கலம், ஜூன் 27:  திருப்பாலைக்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி அலுவலகம் பல நாட்களாகவே பூட்டியே கிடப்பதால் பொதுமக்கள் அடிப்படை தேவைக்கு அவதிப்பட்டு வருகின்றனர். ஆர்.எஸ். மங்கலம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்டது திருப்பாலைக்குடி கிராமம் ஆகும். இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பஞ்சாயத்து அலுவலகம் என்று சொல்லக் கூடிய அலுவலகத்தில் ஏற்கனவே கிளர்க்காக வேலை பார்த்து வந்தவர் லஞ்ச ஊழல் புகாரின் பேரில்  சுமார் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டர். இதனால் இந்த ஊராட்சிக்கு பல மாதங்களாக ஊராட்சி செயலர் என்று சொல்லக் கூடிய கிளர்க் இல்லாமல் ஊராட்சி மூலமாக பொதுமக்களுக்கு தேவைப்படும் எந்த ஒரு வேலையும் நடைபெறவில்ல. கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்ட கிளர்க்கும் பெரும்பாலாக வருவதில்லை. இதனால் அலுவலகம் பூட்டியே கிடக்கிறது.

தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகளாகிய ஊராட்சி மன்ற தலைவர், மற்றும் கவுன்சிலர்கள் இல்லாத நேரத்தில் அந்த ஊராட்சியின் பெரும்பாலான ஒட்டு மொத்த பொறுப்பும் பஞ்சாயத்து கிளர்க்கையே சார்ந்தது. எனவே பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதி பொதுமக்களுக்கு தெருவிளக்கு குடி தண்ணீர், சுகாதாரம் சார்ந்த துப்புரவு பணிகளை செய்து கிராமத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்வது இவர்களின் தலையாய கடமை பணி ஆகும். இப்படி உள்ள சூழலில் அலுவலகம் பூட்டிக் கிடப்பதால் இப்பகுதி மக்களின் தேவை பூர்த்தியடையாமல் உள்ளதாகவும், மேலும் அவசரத் தேவைக்கு வீட்டு ரசீது கூட போட்டு வாங்க முடியாமல் உள்ளது. மேலும் பெரும்பாலான பகுதியில் தெருவிளக்குகள் எரியாமல் இருளில் பொதுமக்கள் அவதிப்பட்டு கொண்டு வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், எங்க ஊரில் உள்ள பஞ்சாயத்து கிளர்க்கை சஸ்பென்ட் செய்து பல மாதங்கள் ஆகி விட்ட நிலையில், அவருக்கு பதிலாக ஒரு கிளர்க்கை நிரந்தரமாக போடாமல் உள்ளனர். இதனால் தெருவிளக்கு, துப்புரவு பணி, மற்றும் அவசரத் தேவைக்கு வீட்டு வரி ரசீது போன்றவற்றின் வசதிகளைப் பெற முடியாமல் பொதுமக்களாகிய நாங்கள் மிகவும் கஷ்டப்படும் நிலையில் உள்ளோம்.  தெருவிளக்கு இல்லாமல் இரவில் திருட்டு அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே எங்களின் அடிப்படை தேவைகளை கண்காணித்து சேவை செய்யும் விதமாக எங்கள் கிராமத்திற்கு நிரந்தரமாக விரைவில் ஒரு கிளர்க்கை பணி அமர்த்தி தினசரி அலுவலகத்தை திறந்து வைக்க பொதுமக்களின் நலனை காக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை