×

கடும் வறட்சியிலும் உடைகுளத்தில் உடைந்து வீணாகும் காவிரி குடிநீர்

சாயல்குடி, ஜூன் 27:  முதுகுளத்தூர் அருகே உடைகுளத்தில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, வரத்து கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வீணாகி வருகிறது. முதுகுளத்தூர் அருகே உடைகுளத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாயில்  உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. வரத்து கால்வாய் முழுவதும் பெருக்கெடுத்து காட்டு பகுதியில் ஓடி வீணாகி வருகிறது. இதனால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. பரமக்குடி-முதுகுளத்தூர் சாலையோரம் உள்ள சில கிராமங்களில் பொதுமக்களுக்காக சில இடங்களில் குழாய் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. குழாயை உடைத்து விட்டு ஊரணியை பெருக்குதல், பருத்தி, கரிமூட்டம், புதிய கட்டிடம் கட்டுவதற்கு பயன்படுத்தி வருவதால் நூற்றுக்கணக்கான கிராம பகுதிகளுக்கு தண்ணீர் முழுமையாக போய் சேருவதில்லை.

இதனால் சாலை மார்க்கம் அல்லாத குக்கிராமங்களுக்கு தண்ணீர் செல்வதில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் குறைந்தது 10 கிலோ மீட்டர் தூரம் தள்ளுவண்டிகளில் வந்து சாலையோரங்களில் கசியும் தண்ணீரை மணிக்கணக்கில் காத்து கிடந்து அள்ளிச் செல்லும் நிலை உள்ளதாக கூறுகின்றனர்.  எனவே பரமக்குடி-முதுகுளத்தூர் சாலையோர காவிரி கூட்டுகுடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை சீரமைத்து அனைத்து கிராமங்களுக்கும் சீரான குடிதண்ணீர் விநியோகம் செய்ய குடிநீர் வடிகால் வாரியம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை