×

கடலாடியில் சாலையின் நடுவே இடையூறாக மின்கம்பம் போக்குவரத்து பாதிப்பு

சாயல்குடி, ஜூன் 27:  கடலாடியில் சாலையின் நடுவே மின்கம்பத்தை அகற்றாமல் சாலை போட்டதால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். கடலாடியிலிருந்து எம்.கரிசல்குளம் வழியாக பிள்ளையார்குளம் செல்ல பிரதான சாலை உள்ளது. இதனை கடலாடி, மேலக்கடலாடி, எம்.கரிசல்குளம், ஒச்சதேவன்கோட்டை, பிள்ளையார்குளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடலாடி அரசு நடுநிலைப்பள்ளி, நீதிமன்றம், கோயில்கள் இச்சாலை அருகே அமைந்துள்ளதால் போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்நிலையில் பத்திரகாளியம்மன் கோயில் முன்புறம் சாலையின் நடுவே மின்கம்பம் ஒன்று உள்ளது. பல முறை இப்பகுதியினர் கடலாடி உதவி மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும், மின் கம்பத்தை மாற்று இடத்தில் அமைப்பதற்கு மின்சார வாரியம் முன்வரவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் பிரதம மந்திரி கிராமச் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடலாடியிலிருந்து எம். கரிசல்குளம் வழியாக பிள்ளையார்குளத்திற்கு புதிய சாலை அமைக்கப்பட்டது. ஆனால் சாலை நடுவில் இருந்த மின்கம்பத்தை அகற்றாமல் புதிய சாலை அமைக்கும் பணி நடந்து முடிந்து விட்டது. இதனால் மின்கம்பத்தால் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுவதால், மாற்றுப்பாதையில் சென்று வருவதாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். எனவே மின்கம்பத்தை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என மின்வாரியத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை