×

நட்டாற்றீஸ்வரர் கோயிலுக்கு செல்ல ரூ.6 கோடியில் பாலம் அமைக்கும் பணி தீவிரம்

ஈரோடு, ஜூன் 27:  ஈரோடு அருகே காங்கயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோயிலுக்கு செல்ல 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி ஆற்றில் பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் இன்னும் ஏழு நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.  ஈரோட்டில் இருந்து கரூர் செல்லும் ரோட்டில் சாவடிப்பாளையம் புதூரில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் காங்கயம்பாளையத்தில் காவிரி ஆற்றின் நடுவே நட்டாற்றீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் இக்கோயில் உள்ளது.   காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாத காலங்களில் நடந்து சென்றும், தண்ணீர் வரும் நாட்களில் பரிசல் மூலமாகவும் சென்று நட்டாற்றீஸ்வரரை வணங்கி வருகின்றனர். ஆற்றில் அதிகமாக தண்ணீர் வரும் காலங்களில் கோயிலுக்கு செல்வது தடைபட்டு வருகிறது. அந்த காலக்கட்டத்தில் பூஜை செய்வதற்கு கூட செல்ல முடியாத நிலை உள்ளது.  காவிரி ஆற்றின் ஒருபுறம் காங்கயம்பாளையமும் மற்றொரு புறம் நாமக்கல் மாவட்டமும் உள்ளது.

இரு மாவட்டங்களை சேர்ந்தவர்களும் கோயிலுக்கு வந்து செல்லும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில்,  ஈரோடு மாவட்ட பகுதியான காங்கயம்பாளையம் கரையில் இருந்து காவிரி ஆற்றின் மத்தியில் உள்ள நட்டாற்றீஸ்வரர் கோயில் வரை மட்டும் செல்லும் வகையில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.  இந்த பாலத்தில் ஒரு லாரி மட்டும் செல்லும் அளவிற்கும், இரண்டு கார்கள் செல்லும் அளவிற்கும் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன்பு துவங்கப்பட்ட பணி தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது.
இதற்கான கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இன்னும் ஏழு நாட்களில் கட்டுமான பணிகளை முடித்து பாலம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி விற்றவர் உட்பட 3 பேர் கைது