×

ஜாமீன் எடுக்கபோலி ஆவணம் தாக்கல் செய்த 6 பேர் கைது

பவானி, ஜூன் 27:  ஈரோடு மாவட்டம் பவானி அருகே தொட்டிபாளையம்,  பனங்காட்டுத் தோட்டம் பகுதியில் வசிக்கும் 10க்கும் மேற்பட்டோரிடம் பாரதப் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், வீடுகள் கட்டி தருவதாக கூறி கடந்த ஓராண்டுக்கு முன்பு  நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த சித்தேஷ்வரன், ராதா, நிர்மலா ஆகிய மூவரும் தலா ரூ.1500 பெற்று சென்றனர். இந்நிலையில், சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த தட்சிணாமூர்த்தி, மணி ஆகியோருடன் கடந்த மாதம் 9ம் தேதி அதே பகுதிக்குச் சென்ற இவர்கள் 5 பேரும் பொதுமக்களிடம் வந்து வீடுகட்டி தருவதற்கு மேலும் ரூ.5 ஆயிரம் தர வேண்டும் என்று கேட்டனர்.இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் இவர்களை பிடித்து பவானி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் 5 பேரையும் கைது செய்து பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சிறையில் உள்ள தட்சிணாமூர்த்தி, ராதா செந்தில்குமார், நிர்மலா முருகேசன் ஆகிய 3 பேரும் ஜாமீன் கேட்டு ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை ஏற்று கொண்ட நீதிபதி நேற்று முன்தினம் 3 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். நேற்று இந்த 3 பேருக்கும் நாமக்கல் மாவட்டம் சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்த மணி (55), சந்திரன் (42), அங்கமுத்து (66), இளங்கோவன் (58), சந்திரன் (38),  சுப்பிரமணி (70) ஆகிய 6 பேரும் ஆவணங்களை சமர்பித்துள்ளனர். இதில் சந்தேகம் எழுந்ததால் திருச்செங்கோடு வட்டாட்சியர் கதிர்வேலிடம், தொலைபேசி மூலம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, இவர்கள் அரசு கோபுர முத்திரை, அதிகாரிகளின் கையெழுத்துக்களை போட்டு போலியாக ஆவணம் தயாரித்து ஜாமீன் வழங்க பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது தெரியவந்தது. இதையடுத்து, பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் - 1 தலைமை எழுத்தர் சிவராஜ் பவானி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், பவானி போலீசார் வழக்குப் பதிவு செய்து போலி ஆவணங்கள் தயாரித்த 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த 2 மையங்கள் அமைப்பு