×

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்துவதில் ஈரோடு மாநகராட்சிக்கு 7ம் இடம்

ஈரோடு, ஜூன் 27:  மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகத்தில் ஈரோடு மாநகராட்சி 7ம் இடத்தில் உள்ளதாக மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இந்திய அளவில் 12 நகரங்களில் ஈரோடு மாநகராட்சியும் தேர்வாகியுள்ளது. இந்த திட்டத்தில் ஈரோடு ஸ்மார்ட் சிட்டிக்கு ரூ.988.15 கோடி மதிப்பீடு செய்யப்பட்டது. இதில், தற்போது 9 திட்டப்பணிகள் ரூ.344.8 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது. ரூ.299.13 கோடி மதிப்பிலான 3 திட்டப்பணிகள் ஒப்பந்தப்புள்ளி ஆய்வு செய்வதிலும், மற்ற திட்டங்கள் தயாரிப்பு நிலையிலும் உள்ளது. இந்த திட்டங்களுக்காக மத்திய அரசு  ரூ.186 கோடியும், மாநில அரசும் தன் பங்கு நிதியை விடுவித்துள்ளது.

 ஸ்மார்ட்டி சிட்டி திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகத்தில் ஈரோடு மாநகராட்சி 7ம் இடத்தில் உள்ளது. இந்த திட்டத்தில் ஈரோடு மாநகராட்சியில், குடிநீர் விநியோக குழாய் அமைத்தல், பாதாள சாக்கடைகளுக்கு வீட்டிணைப்புகள் வழங்குதல், ஒருங்கிணைந்த தகவல் மையம், பயோ-மைனிங் முறையில் திடக்கழிவுகளை அப்புறப்படுத்துதல், நுண்ணுயிர் உரக்கூடங்கள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. 30 பூங்காக்களில் பசுமை வெளி மேம்பாடு செய்தல், பெரியார் நகர் 80 அடி சாலை, பெரியார் நகர் பிரதான சாலை, சிதம்பரம் காலனி சாலை, கலைமகள் பள்ளி மற்றும் ஜீவானந்தம் சாலை ஆகியவற்றை ஸ்மார்ட் சாலைகளாக அமைத்தல். மின் சிக்கன நடவடிக்கையாக சாதாரண தெருவிளக்குகளை எல்இடி பல்புகளாக மாற்றுதல், மாநகராட்சிக்கு உட்பட்ட 27 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைத்தல், விடுப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைத்தல், பெரும்பள்ளம் ஓடை மேம்பாடு செய்தல், கனிமார்க்கெட்டில் புதிய நவீன வணிக வளாகம் அமைத்தல், சாலை குறியீடுகள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

Tags :
× RELATED தமிழக கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை