சாலையோரத்தில் அவசரத்திற்கு ஒதுங்கினால் ரூ.100 அபராதம்

ஈரோடு, ஜூன் 27:   ஈரோடு மாநகராட்சி பகுதியை குப்பை இல்லாத நகரமாக உருவாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இத் திட்டத்தின்கீழ், வார்டு பகுதிகளில் குப்பைகளை வீடு, வீடாக சென்று சேகரிக்கும் வகையிலும், குப்பை தொட்டிகளே இல்லாத பகுதியாகவும் மாற்றப்படுகிறது. தற்போது, மாநகராட்சி பகுதிகளில் சாலையோரங்களில் குப்பை கொட்டுவதற்கும், அவசரத்திற்கு சிறுநீர் கழிக்க ஒதுங்கினாலும் மாநகராட்சி சார்பில் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு பலகை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டல பகுதிகளிலும் வைக்கப்பட்டுள்ளது. வீடு, வணிக நிறுவனங்களை சேர்ந்தவர்கள் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து அதற்குரிய தொட்டிகளில் போட வேண்டும். இல்லையெனில், இடத்திற்கு ஏற்ப 100, 200  ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என 40 இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறுகையில்,`ஈரோடு மாநகராட்சி பகுதியை தூய்மையான நகரமாக மாற்றும் வகையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அதன்படி, குப்பைகளை தரம் பிரிக்க மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர், உரமாக்கும் மையம் போன்ற திட்டப்பணிகள் நடந்து வருகிறது. தற்போது, மாநகராட்சி பகுதிகளில் சாலையோரங்களில் சிறுநீர் கழிப்பது, குப்பைகளை கொண்டு வந்து கொட்டுவது தொடர்ந்து நடக்கிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 100 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படுகிறது. இதுவரை 25 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிகக வேண்டும்’ என்றார்.

Related Stories: