துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க கோரிக்கை

ஈரோடு, ஜூன் 27:  துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிராம பஞ்சாயத்து டேங்க் ஆப்ரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சங்க மாநில தலைவர் சண்முகம் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 12,524 கிராம ஊராட்சி பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் வாழும் மக்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் வகையில் கடந்த பல ஆண்டுகளாக மிக குறைந்த ஊதியத்தில் துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.கடந்த 2013ம் ஆண்டு முதல் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்களை கால ஏற்றமுறை ஊதியத்திற்கு கொண்டு வர வேண்டும் என பல ஆண்டுகளாக சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை சிறப்பு காலமுறை ஊதியத்தில் மாதம் 6 ஆயிரம் ரூபாய் ஊதியத்திலேயே பணியாற்றி வருகின்றனர்.சமீபத்தில் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு கால ஏற்றமுறை ஊதியம் அறிவிக்கப்பட்டுள்ளது.  அனைத்து ஊராட்சிகளில் பணியாற்றி வரும் டேங்க் ஆப்ரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு ஊராட்சி செயலாளருக்கு வழங்குவது போல காலமுறை ஊதியமாக  மாதம் 15 ஆயிரம் ரூபாய் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு சண்முகம் கூறினார்.

Related Stories: