மாவட்டம் முழுவதும் கால்நடை பாதுகாப்பு முகாம்

ஈரோடு, ஜூன் 27: ஈரோடு மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தொட்டிபாளையம் கிராமத்தில் கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் நேற்று துவங்கியது. முகாமை கலெக்டர் கதிரவன் துவக்கி வைத்து பேசியதாவது: ஏழை, எளிய மக்களின் கால்நடைகளுக்கு இலவச மருத்துவ வசதி அளிப்பதற்காக கால்நடை பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கால்நடை மருந்தகங்களில் இருந்து தொலைதூரம் அமைந்துள்ள கால்நடை மருத்துவ வசதி இல்லாத குக்கிராமங்களில் உள்ள விவசாயிள் பயன் பெறும் வகையில் கால்நடைகளுக்கு அந்தந்த கிராமங்களிலேயே மருத்துவ வசதி மேற்கொள்ள கால்நடை பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் 2019-20ம் ஆண்டில் 216 முகாம்கள் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட 216 முகாம் மூலம் ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 265 கால்நடைகள் பயன்பெற்றுள்ளது. இந்த முகாம்களில் பங்கு பெறும் கால்நடைகளுக்கு சிகிச்சை, ஆண்மை நீக்கம், தடுப்பூசி, சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம், மலடு நீக்க சிகிச்சை, செயற்கைமுறை கருவூட்டல், அறுவை சிகிச்சை போன்றவை இலவசமாக செய்யப்பட்டது. கால்நடை நோய் புலனாய்வு பிரிவின் மூலம் மாதிரிகள் கால்நடைகளிடமிருந்து சேகரிக்கப்பட்டு பரிசோதனை அடிப்படையில் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: