×

விளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

சூலூர் ,ஜூன் 27:விளை நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க  எதிர்ப்பு தெரிவித்து கோவை சூலூர் அருகே போராட்டம் நடத்திய விவசாயிகள் 30 பேர் கைது செய்யப்பட்டனர். விவசாய நிலங்களை அளவீடு செய்ய வேண்டாம் என்று அதிகாரிகளிடம் கெஞ்சிய சிறுமியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.   தமிழகம் முழுவதும் உயர் மின் கோபுர வழித்தடம் அமைக்க விவசாய நிலங்களை அளவீடு செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.   இந்நிலையில் கோவை மாவட்டம் சூலூர் அருகே போகம்பட்டி பகுதியில் நேற்று உயர்மின் கோபுரம் அமைக்க நிலம் அளவிடும் செய்யும் பணி நடந்தது. வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பவர்கிரிட் சர்வேயர்கள் அப்பகுதிக்கு வந்தனர். தகவல் அறிந்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு நில அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம்  டிஎஸ்பி. பாஸ்கரன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் நிலம் அளவிடும்  பணியை நிறுத்தும் வரை போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் தெரிவித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை போலீசார் கைது செய்ய முயன்றபோது அங்கிருந்த பெண் ஒருவர் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த உயர் மின் கோபுரத்தில் ஏறி கோஷமிட்டார்.  போலீசார் அவரை கீழே இறக்கி சமாதானப்படுத்தினர். அப்போது அந்த பெண் மயங்கி விழுந்ததால்  பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அந்த பெண்மணியின் 10 வயது பெண் குழந்தை ‘எங்களது நிலங்களை நீங்கள் எடுத்துக்கொண்டால் நாங்கள் எங்கு செல்வோம். என் தாயை கைது செய்ய வேண்டாம்’ என்று கூறி கண்ணீர் மல்க போலீசாரிடம் வேண்டுகோள் விடுத்தார். இதனைடுத்து அவரது தாயாரை போலீசார் கைது செய்யவில்லை.

Tags :
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்