×

மதுக்கரையில் 1300 வீடுகளுக்கு 50 ஆண்டாக குடிநீர் இணைப்பு மறுப்பு

கோவை, ஜூன் 27:கோவை மதுக்கரை பேரூராட்சியில் 1300 வீடுகளுக்கு 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் குடிநீர் இணைப்பு வழங்காத அவலம் நீடிக்கிறது.   கோவை மதுக்கரை பேரூராட்சியில் மரப்பாலம், மதுக்கரை மார்க்கெட், குரும்பபாளையம், மலைசாமி கோயில் வீதி, காந்திநகர், முஸ்லீம் காலனி, சர்ச் காலனி உள்பட பல்வேறு வீதிகளில் 38 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். 18 வார்டுகளில், பேரூராட்சி சார்பில் சுமார் 9 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மலைச்சாமி கோயில், குரும்பபாளையம் ரோடு, குவாரி ஆபீஸ், பெருமாள் கோவில் வீதி, சைடிங் கேட் உள்ளிட்ட பகுதியில் சிமெண்ட் நிறுவனத்திற்கு சொந்தமான 1300 வீடுகள் (குவார்ட்டர்ஸ்) இருக்கிறது. இந்த வீடுகளில் சுமார் 5 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இந்த வீடுகளுக்கு இதுவரை குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை.

 தனி நபர் பெயரில் வீடு இருந்தால் வீட்டு வரி, குடிநீர் வரி விதிக்கப்படும். வரி விதிக்கப்பட்ட வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதில் எந்த தடையும் கிடையாது.  ஆலை நிர்வாகத்தின் பெயரில் உள்ள 1300 வீடுகளுக்கு தனித்தனியாக வீட்டு வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் குடிநீர் இணைப்பு வழங்க பேரூராட்சி நிர்வாகம் மறுத்து விட்டது. சிமெண்ட் நிறுவனத்தின் சார்பில் 50 ஆண்டிற்கும் முன் குடியிருப்புகள் கட்டப்பட்டது. இந்த வீடுகளை மையப்படுத்தியே வீதிகள் உருவானது. ஆலை குடியிருப்பு பகுதி மக்கள் உப்பு நீரை குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். ஆலை குடியிருப்பு அல்லாத பகுதியில் பில்லூர் குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்கப்படுகிறது.  மதுக்கரை ஆலை குடியிருப்பு பகுதி மக்கள் கூறுகையில், ‘‘ கம்பெனி குவார்ட்டஸ் பகுதியை பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை. ரோடு, தெரு விளக்கு எல்லாமே கம்பெனி நிர்வாகம் சொந்த ெசலவில் செய்து கொடுத்து வருகிறது. பேரூராட்சி நிர்வாகத்தில் இருந்து இதுவரைக்கும் சாக்கடை கால்வாய் கூட அமைக்கவில்லை. கொசு மருந்து கூட எங்கள் பகுதிக்கு தெளிப்பதில்லை, ’’ என்றனர்.

 பேரூராட்சி நிர்வாகத்தினரிடம் கேட்ட போது, ‘‘ பில்லூரில் இருந்து குடிநீர் வடிகால் வாரியத்திடம் இருந்து ஆலை நிர்வாகத்தினர் தனியாக குடிநீர் இணைப்பு பெற்றுள்ளனர். அவர்கள் தான் குவார்ட்டஸ் வீடுகளுக்கு குடிநீர் வழங்கவேண்டும். தனியார் ஆலை நிர்வாக எல்லைக்குள் எங்களால் பொதுமக்களுக்கான வீட்டு குடிநீர் இணைப்பு வழங்க இயலாது. ஆனால் ரோட்டோரம் பொது குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் வழங்கி வருகிறோம், ’’ என்றனர்.

Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்