×

கொடைக்கானலில் இரண்டாவது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம் நெடுஞ்சாலைத்துறை அதிரடி

கொடைக்கானல், ஜூன் 27: கொடைக்கானலில் சாலையோரம் ஆக்கிரமிக்கப்பட்ட கடைகள் 2வது நாளாக அகற்றப்பட்டன.கொடைக்கானல் பகுதியில் நெடுஞ்சாலையை ஆக்கிரமிப்பு செய்து கடைகள், சிறு வீடுகள் அமைத்து இருப்பதாக மாவட்ட கலெக்டருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை தாங்களே அகற்றி கொள்ளும்படி கடைகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. மேலும் கடந்தவாரம் ஒலிபெருக்கியி மூலம் அறிவுறுத்தப்பட்டதுடன் முதற்கட்டமாக ஏரிச்சாலை அருகே ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கியது.தொடர்ந்து நேற்று முன்தினம் மூஞ்சிக்கல்லில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. இதில் நகராட்சி சார்பாக அமைக்கப்பட்டு இருந்த பயணிகள் தங்கும் விடுதி, ருந்தகம் உள்பட 20க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன.நேற்று 2வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. லாஸ்காட் சாலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த பல கடைகள் அகற்றப்பட்டன. அப்போது சில கடை உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவகாசம் வழங்கப்பட்டது. இப்பணியில் நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், பொறியாளர் செந்தில்,தாசில்தார் வில்சன், நகரமைப்பு அலுவலர் முருகானந்தம், அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் பல்வேறு துறையினர் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கையாக கொடைக்கானல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஆர்டிஓ சுரேந்திரன் கூறுகையில், ‘முதற்கட்டமாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி ஏரிச்சாலையில் துவங்கப்பட்டது. இப்பணிகள் வரும் 4 நாட்கள் நடைபெறவுள்ளது. ஏரிச்சாலை முதல் வெள்ளி நீர்வீழ்ச்சி வரை சுமார் 220 கடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இந்த கடைகள் அனைத்தும் முழுமையாக அகற்றப்படும். அப்போது சாலையின் அகலம் சுமார் 12 அடி வரை அதிகரிக்கும். மீண்டும் அந்த இடத்தில் ஆக்கிரமிக்கா வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும். நீர்நிலை குடியிருப்புகளை தற்போது அகற்ற போவதில்லை’ என்றார்.

Tags :
× RELATED பழநியில் திமுக கூட்டணியினரின் தேர்தல் பணிகளை எம்எல்ஏ ஆய்வு