×

ஆத்தூர் ஜிஹெச்சுக்கு வந்தா அரைநாள் பொழுது போயிடும் ஒரு டாக்டரே இருப்பதால் நோயாளிகள் கடும் அவதி

செம்பட்டி, ஜூன் 27: ஆத்தூர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் மணிக்கணக்கில் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது.ஆத்தூரில் உள்ள சமுதாய நல மருத்துவமனை அரசு மருத்துவமனையாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தரம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து உள்நோயாளிகள் பிரிவு கட்டும் பணி துவங்கி முடிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் உள்நோயாளிகள் பிரிவை துவங்கி வைத்தார்.இந்நிலையில் தரம் உயர்ந்தும் நோயாளிக்கு சிகிச்சையளிக்க போதிய மருத்துவர்கள் நியமனம் செய்யாததால் அரசு மருத்துவமனை கோமா நிலையில் உள்ளது. பகல் நேரத்தில் ஒரு மருத்துவர் மட்டுமே பணியில் உள்ளார். இவரை வைத்துதான் அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் மருத்துவமனையில் பணிபுரியும் 6 செவிலியர்கள்தான் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை உள்ளது.ஆத்தூர் மட்டுமின்றி சுற்றியுள்ள அக்கரைப்பட்டி, மல்லையாபுரம், எஸ்.பாறைப்பட்டி, போடிக்காமன்வாடி, பாளையன்கோட்டை, பிரவான்பட்டி, கூலம்பட்டி, செம்பட்டியை சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். தினசரி 100க்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் இம்மருத்துவமனையில் ஒரே ஒரு கழிப்பறை தான் உள்ளது. ஏற்கனவே இருந்த 2 கழிப்பறைகளில் ஒன்றை பூட்டி அதில் கம்ப்ரசர் மோட்டாரை பொருத்தி உள்ளனர். இதனால் ஆண், பெண் இருவரும் ஒரே கழிப்பறையை பயன்படுத்தும் நிலை உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘ஆத்தூர் அரசு மருத்துமனையாக தரம் உயர்ந்த போது மருத்துவர்கள், மருந்தாளுனர்கள், செவிலியர்கள், அமைச்சு பணியாளர்கள், உதவியாளர்கள் என 20க்கும் மேற்பட்ட பணியிடங்களை உருவாக்கினர். அதன்பின்பு சில மாதங்களிலே பலர் வெளி பணிக்காக மற்ற ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டனர். பகலில் ஒரே ஒரு மருத்துவர்தான் சிகிச்சை அளித்து வருகிறார். இதனால் நோயாளிகள் மணிக்கணக்கில் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டியுள்ளது. இரவில் அதுவும் இல்லை. இதனால் அவசர காலங்களில் அருகிலுள்ள ஊர்களின் அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மருத்துவமனையில் இருந்த 2 கழிப்பிடத்தில் ஒன்றை பூட்டி விட்டனர். இதனால் இருபாலரும் ஒரே கழிப்பறையை பயன்படுத்துவதால் தர்மசங்கடம் ஏற்படுகிறது. கடந்த திங்கள்கிழமை மருத்துவமனையை பார்வையிட வந்த மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் மாலதியிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்கள் நியமனம் செய்து நோயாளிகளுக்கு விரைவில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கூடுதல் கழிப்பறை வசதிகள் செய்து தர வேண்டும்’ என்றனர்.

Tags :
× RELATED கோடை காலத்தை சமாளிக்க பண்ணைக்குட்டைகள் அமைக்க விவசாயிகள் ஆர்வம்