×

குப்பை தொட்டியாக மாறிய மரக்காணம் ஆண்டிகுளம்

மரக்காணம், ஜூன் 27: மரக்காணம் பேருந்து நிலையம் அருகில் உள்ளது ஆண்டிக்குளம். இந்த குளத்து தண்ணீர் 20 ஆண்டுகளுக்கு முன்புவரை பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்தது. மேலும் இதில் நீர் நிரம்பினால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டமும் பாதுகாக்கப்பட்டது. ஆனால் இந்த குளத்தை சுற்றிலும் இருந்த அரசுக்கு சொந்தமான இடங்களை ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்துவிட்டதாக பொதுமக்கள் குறை கூறுகின்றனர். இதனால் இக்குளத்தின் பரப்பளவு வெகுவாக குறைந்துவிட்டது. இதுபோல் இதன் அருகில் வீடு கட்டியுள்ளவர்கள் தங்களது வீட்டு கழிவுநீரை நேரடியாக குளத்தில் விட்டு விடுகின்றனர். இதன் காரணமாக குளத்தின் நீர் மாசு அடைந்துவிட்டது. மேலும் பேருந்து நிலையம் பகுதியில் அள்ளப்படும் குப்பைகளையும் இந்த குளத்தில்தான் கொட்டி விடுகின்றனர். இதுபோன்ற காரணங்களால் ஆண்டுதோறும் குளத்தின் ஆழம் குறைந்து கொண்டே வருகிறது. இந்த குளத்தில் பேரூராட்சி நிர்வாகத்தினரும் குப்பைகளை கொட்டுவதாக பொதுமக்கள் குறை கூறுகின்றனர். தற்போது பருவகால மாற்றத்தினால் ஆண்டுதோறும் பருவ மழையும் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து குடி நீருக்கு தட்டுப்பாடு உண்டாகும் அவல நிலை உள்ளது.

இதனால் நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. ஆனால் அரசு அதிகாரிகள் ஒதுக்கப்படும் நிதியை முறையாக செயல்படுத்தாமல் பெயரளவுக்கு நிலத்தடி நீர் பாதுகாப்பு குட்டைகளை அமைப்பதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர். மரக்காணம் பேரூராட்சி சார்பில் பொது இடங்களில் இருக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த ஆண்டுதோறும் பல லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது.
ஆனால் இந்த பேரூராட்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ள குளத்தில் குப்பை குவியல்கள் நிறைந்துள்ளது. இந்த கழிவு பொருட்களில் இருந்து அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களை தாக்குவதால் இப்பகுதியில் உள்ளவர்களுக்கு டெங்கு, டைப்பாய்டு, மலேரியா உள்ளிட்ட மர்ம நோய்கள் பரவும் அபாய நிலை உள்ளது. எனவே இப்பகுதி பொதுமக்களின் நலன் கருதி மழைக்காலம் துவங்கும் முன் இந்த குளத்தில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றி குளத்தையும் ஆழப்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை