×

தனியார் ஆலைக்கு கரும்புகளை அனுப்பும் விவசாயிகள்

சின்னசேலம், ஜூன் 27:  கச்சிராயபாளையம்   கோமுகி சர்க்கரை ஆலை பகுதியில் இருந்து பதிவு கரும்புகளை தனியார் ஆலைக்கு   அனுப்பி வைக்கும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். கச்சிராயபாளையம் கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை  துவக்கிய  காலத்தில் இருந்து ஒரு கரும்பு அரவை பருவத்திற்கு சராசரியாக  4லட்சம் டன்  கரும்பு அரவை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கரும்பு  விவசாயிகளின்  நலன்கருதி சிறப்பு கரும்பு அரவையும் துவக்கி சுமார் ஒரு  லட்சம் டன் கரும்பு  அரவை செய்து வருகின்றனர். இருப்பினும் கடந்த இரண்டு  ஆண்டுகளாக போதிய  பருவமழை இல்லாத காரணத்தால் கரும்பு அரவையில் தொய்வு  ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு கரும்பு ஓரளவுக்கு  அறுவடைக்கு தயாரான நிலையில்  வயல்கள் காய்ந்து சருகாகி வருகிறது. இதனால்  வயலை உழுது, பார் அமைத்தல்,  நடவு கரும்பு வாங்கி நடவு செய்தல், உரமிடுதல்,  வறட்சியிலும் சொட்டு நீர்  பாசனம் செய்தல், களையெடுத்தல் போன்ற பல்வேறு  செலவுகளை செய்தும்  பயனில்லாமல்  கடனாளியாகும் நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

இந்த  நிலையில் கூட்டுறவு ஆலை  நிர்வாகம் கரும்பு விவசாயிகளின் கஷ்டங்களை பற்றி கண்டு  கொள்ளவில்லை.  அவ்வாறு காய்ந்து வரும் கரும்பு வயல்களை கணக்கெடுத்து அந்த  கரும்பை வெட்டி,  அருகில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்ப  நடவடிக்கை எடுக்க  வேண்டும் அல்லது இந்த ஆலையிலேயே முன்கூட்டியே சிறப்பு  கரும்பு அரவையை  துவக்க வேண்டும்  என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.  
ஆனால் இக்கோரிக்கைக்கு கூட்டுறவு ஆலை நிர்வாகம் செவி சாய்க்காததால் தற்போது  காய்ந்து வரும்  கரும்பை வெட்டி தனியார் சர்க்கரை ஆலைக்கு அனுப்பி  வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால்  வறட்சி நீங்கி தண்ணீர்  பிரச்னை தீர வாய்ப்புள்ளது. ஆகையால் கூட்டுறவு ஆலை  நிர்வாகம் விவசாயிகளை சந்தித்து  அவர்களிடம் எடுத்து சொல்லி தனியாருக்கு  செல்லும் கரும்பை தடுக்க வேண்டும்  என்று சமூக ஆர்வலர்கள்  எதிர்பார்க்கின்றனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை