அரசு பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்காவிட்டால் போராட்டம்

புதுச்சேரி ஜூன் 27: புதுச்சேரி யூனியன் பிரதேச அனைத்து சென்டாக் மாணவர்கள், பெற்றோர்கள் நலச்சங்க பொருளாளர் வி.சி.சி நாகராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புதுச்சேரி அரசு பள்ளிகளில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு 26ம் தேதி (நேற்று) முதல் 3 நாட்களுக்கு மாதத்தேர்வு நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வி இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் அன்னை சிவகாமி, திருவள்ளுவர், என்கேசி, கண்ணகி, சுப்பிரமணிய பாரதியார் உள்ளிட்ட பெரும்பாலான அரசு பள்ளிகளில் தமிழ், சமூக அறிவியல், கணிதம் உள்ளிட்டவற்றில் ஒரு சில பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாததால் இதுவரை ஒரு வகுப்பு கூட நடத்தப்படவில்லை. மேலும் பெரும்பாலான பள்ளிகளுக்கு புத்தகங்களும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தேர்வு நடத்தினால் மாணவர்கள் எப்படி தேர்ச்சி பெறுவார்கள்? இப்படி இருந்தால் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளின் தரத்தை எப்படி உயர்த்த முடியும்? பெரும்பாலான தனியார் பள்ளிகளில் பாதி பாடங்கள் முடித்துவிட்டு காலாண்டு தேர்வுக்கு தயாராகி விட்டார்கள். மேலும் 95 சதவீதம் பாடப்புத்தகங்களும் வழங்கப்பட்டு விட்டன. ஏற்கனவே அரசு பள்ளிகளில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே போகிறது. மாணவர்கள் இல்லாததால் கிராமப்புற பள்ளிகள் ஏற்கனவே மூடப்பட்டு வருகிறது. தற்போது இதே நிலை நீடித்தால் நகரப் பகுதியில் இயங்கும் அரசு பள்ளிகளையும் இழுத்து மூடும் நிலை உருவாகும். எனவே புதுச்சேரி அரசும், பள்ளிக் கல்வித்துறையும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக ஆசிரியர்களை நியமித்து ஏழை, எளிய மாணவர்களின் கல்வியை கேள்விக்குறி ஆக்காமல் பாதுகாக்க வேண்டும். மேலும் பாடப்புத்தகங்களும் உடனடியாக வழங்க வேண்டும். இல்லாவிட்டால் எங்களது சங்கம் சார்பில் அனைத்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை ஒன்று திரட்டி புதுச்சேரியே ஸ்தம்பிக்கும் வகையில் வரும் 3ம் தேதி போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: