பசுமை இயக்கத்தில் பங்குபெற பள்ளிகளுக்கு கவர்னர் அழைப்பு

புதுச்சேரி, ஜூன் 27:     பசுமை புதுச்சேரி மற்றும் நீர்வளமிக்க புதுச்சேரி என்பதை வலியுறுத்தி வார இறுதி நாட்களில் ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் மரக்கன்றுகள் நடப்படும் என கவர்னர் கிரண்பேடி தெரிவித்திருந்தார். அதன்படி, கடந்த வாரம் கனகன் ஏரியில் ஆய்வு செய்தார். அப்போது ஏரியில் மருத்துவ கழிவு கலப்பது அதிரடியாக தடுத்து நிறுத்தினார். பின்னர், ஏரியை சுற்றி மரக்கன்றுகள் நட்டு புதுச்சேரி பசுமை இயக்க பணிகளை கவர்னர் தொடங்கி வைத்தார். இந்நிலையில் நேற்று கனகன் ஏரிக்கு கவர்னர் கிரண்பேடி மீண்டும் சென்றார். அங்கு, இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுடன் இணைந்து மா, புளி உள்ளிட்ட 30 வகையான 300 மரக்கன்றுகள் மற்றும் விதைகளை சுற்றி ஊன்றினர். அதற்கு மாணவர்கள் தண்ணீர் ஊற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, 100 மாணவர்களுடன் அப்பகுதியில் பேரணியாக சென்று, பொதுமக்களிடம் நீர் சேமிப்பு, மரம் நடுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அடுத்தகட்டமாக, வடகிழக்கு பருவமழை சீசன் நெருங்கி வருவதால், வார இறுதி நாட்களில் பசுமை இயக்கத்தில் அனைத்து பகுதி பள்ளி மாணவர்களும் ஈடுபடுவதற்கு கவர்னர் கிரண்பேடி அழைப்பு விடுத்துள்ளார். கிராமப்புறங்களில் உள்ள ஏரிகள், நீர்நிலைகளில் மாணவர்களுடன் சென்று மரக்கன்றுகள் நடவும், விதைகளை தூவுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கவர்னர் மாளிகையை அணுகலாம். ஆனால், விதைகள், மரக்கன்றுகள் மற்றும் தண்ணீரை சம்மந்தப்பட்ட பள்ளிகளை ஏற்பாடு செய்ய வேண்டும். இதனை ஒரு ஆவணப்படமாக எடுத்து, பிரதமர் அலுவலகம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். பசுமை இயக்கத்திற்காக புதுமையான திட்டங்களை தெரிவிப்போருக்கு கவர்னர் மாளிகை ஊக்குவிக்கும் என கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

Related Stories: