×

பொதுமக்கள் வலியுறுத்தல் பொதுமக்கள் கூடும் இடங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும்

க.பரமத்தி, ஜூன் 27: கரூர் மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பட்டாசு வெடித்து இடையூறு செய்தால், நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாவட்டத்தில் 2 வருவாய் கோட்டங்கள், 8 ஊராட்சி ஒன்றியங்கள் இவற்றின் கீழ் 157 ஊராட்சிகள் உள்ளன. திருச்சி மாவட்டத்தின் ஒரு வருவாய் கோட்டமாக செயல்பட்டு வந்த கரூர் 1995ம் ஆண்டு முதல் மாவட்டமாக செயல்பட்டு வருகிறது. கரூர் மாவட்டமாக தரம் உயர்த்தப்பட்டு மாவட்டத்தின் கிழக்கு. மேற்கு, தெற்கு, வடக்கு, என 4 திசைகளிலும் மாவட்டத்தின் எல்லைப்பகுதி வரை பரந்து விரிந்துள்ளது. இதில் நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளில் பல்வேறு வாகன போக்கு வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக்கிய பிரமுகர்கள் பிறந்த நாள் கொண்டாட்டம், திருமணம், காதணி விழா, கோயில் விழாக்கள், இறுதி ஊர்வலம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்கும் நடைமுறை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பொதுவாக பொது இடத்தில் பட்டாசு வெடிப்பதால் சாலைகளில் நடந்து செல்லும் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், இரு சக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் ஆகியோர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் பெண்கள், முதியோர், குழந்தைகள் அச்சத்துடன் நடந்து செல்லும் சூழ்நிலை நிலவுகிறது. மேலும் அதிக அளவில் வெடிக்கப்படும் பட்டாசுகளால் சுற்றுச் சூழலும் மாசுப்படுகிறது. இது போன்ற நிகழ்வுகள் பல்வேறு நிகழ்ச்சிகளாலும் குறிப்பாக இறுதி ஊர்வலம் போன்ற நிகழ்வுகளால் அடிக்கடி சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் ஸ்தம்பித்து அணி வகுத்து நிற்பதை காண முடிகிறது. இதனால் பஸ். கார் உள்ளிட்ட வாகனங்களில் அவசரத்திற்கு செல்பவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு உரிய நேரத்திற்கு செல்ல இயலாத நிலை உருவாகிறது என புலம்புகின்றனர்.
மேலும் பொது இடங்களில் பட்டாசு வெடிப்பதால் பட்டாசு வெடிப்பவரின் கவனக்குறைவால், வெடி விபத்து ஏற்பட்டு, பொது மக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. சில இடங்களில் உயிரிழப்பு ஏற்பட்டு விடுகிறது. சில இடங்களில் பட்டாசு வெடிப்பதால், அருகில் உள்ள கட்டடங்கள், வயல் பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும் இது போன்ற நிகழ்வுகளால் சில இடங்களில் தகராறு ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், போக்குவரத்து நிறைந்த பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் பட்டாசு வெடித்து போக்குவரத்திற்கு இடையூறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED தோகைமலை அருகே முள்காட்டில் பதுக்கி வைத்து மதுபாட்டில் விற்றபெண் கைது