×

மக்கள் நேர்காணல் முகாம் 91 பயனாளிகளுக்கு ரூ.9.50 லட்சம் நலத்திட்ட உதவி கலெக்டர் வழங்கினார்

திருவாரூர் ,ஜூன் 27: திருவாரூர் மாவட்டம் குடவாசலில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் 91 பயனாளிகளுக்கு ரூ ஒன்பதரை லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆனந்த் வழங்கினார்.திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா சிமிழி கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாமானது நேற்று கலெக்டர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் 91 பயனாளிகளுக்கு வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, மகளிர் திட்டம், தோட்டக்கலைத் துறை ஆகிய துறைகளின் சார்பில் ரூ. 9 லட்சத்து 56 ஆயிரத்து 27 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி கலெக்டர் ஆனந்த் பேசியதாவது, பொது மக்களுக்காக மாநில அரசும், மத்திய அரசும் பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்திபடுத்தி வருகிறது. இதில் மத்திய அரசு மூலம் பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் ஆண்டு ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக கூட்டு பட்டாவாகவுள்ள நிலங்களுக்கும் உடனடியாக பட்டா மாறுதல் செய்வதற்கு விண்ணப்பித்தால் ஒரு வாரத்திற்க்குள் பட்டா மாறுதல் செய்து தரப்படும்.

மேலும் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும் தட்டுபாடின்றி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஏதேனும் பிரச்சனை இருப்பின் குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ்அப் மூலம் கலெக்டருக்கோ, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கோ தெரிவித்தால் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த மக்கள் நேர்காணல் முகாமின் நோக்கமே ஒவ்வொரு கோரிக்கைகளுக்கும் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து செல்லுவதை தவிர்த்து உங்கள் பகுதிகளிலேயே கோரிக்கை மனுக்களை பெற்று அதை உடனடியாக நிவர்த்தி செய்வதற்காகவே இம்முகாம் நடத்தப்படுகிறது.எனவே இதுபோன்ற முகாம்களில் பொது மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் ஆனந்த் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தெய்வநாயகி, மகளிர் திட்ட அலுவலர் லேகா, சமூக பாதுகாப்புத் திட்டம் துணைகலெக்டர் ஜெயதீபன், ஆர்டிஓ முருகதாஸ், , தாசில்தார் ஜீவானந்தம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED முத்துப்பேட்டை அருகே தென்னங்கன்றுகளுக்கு தீ வைத்தவருக்கு கத்திக்குத்து