×

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மேலும் 104 கிணறுகள் அமைக்க அனுமதியா? விவசாயிகள் சங்கம் கண்டனம்

திருவாரூர், ஜூன் 27: தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்காக மேலும் 104 கிணறுகள் அமைக்கவுள்ளதாக வரும் தகவலுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.தமிழகத்தில் விழுப்புரம், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தினை மேற்கொள்வதற்கு மத்திய அரசு ஓ.என்.ஜி.சி மற்றும் தனியார் நிறுவனமான வேதாந்தா நிறுவனத்திற்கு என மொத்தம் 274 இடங்களில் கிணறுகள் அமைப்பதற்கு அண்மையில் அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து இதற்கான பணிகள் துவங்கப்பட உள்ள நிலையில் இந்த ஹைட்ரோகார்பன் திட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் டெல்டா மாவட்டங்களில் பாலைவனமாக மாறும் என்பதால் இந்த திட்டத்தினை கண்டித்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விவசாயிகளும், பொதுமக்களும் தினந்தோறும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு தன்னெழுச்சியாக மக்கள் போராட்டம் நடத்தும் நிலையில் இதற்காக போலீசார் வழக்கும் பதிவு செய்து வருகின்றனர்.இந்நிலையில் இந்த திட்டத்திற்காக தற்போது மீண்டும் நாகை, திருவாரூர், தஞ்சை, அரியலூர், கடலு£ர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 104 கிணறுகள் அமைப்பதற்கு ஒ.என்.ஜி.சி நிறுவனம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருப்பதாக கூறப்படும் நிலையில் இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.இதுகுறித்து அதன் மாநில துணை செயலாளர் மாசிலாமணி கூறுகையில், இந்த திட்டத்திற்காக ஏற்கனவே பொது மக்களும், விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மீண்டும் 104 கிணறுகள் அமைக்கும் திட்டம் என்பது டெல்டா மாவட்ட மக்களை முழுமையாக ஒடுக்குவதற்கு மத்திய அரசு திட்டம் போட்டுள்ளது என்பது அப்பட்டமாக தெரிய வந்துள்ளது.எனவே தமிழக அரசும் இதற்கு வாய்திறக்காமல் இருந்து வரும் நிலையில், 2 அரசுகளையும் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மாசிலாமணி தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED தமிழ்பல்கலை கழகத்தில்...