×

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5,789க்கு ஏலம்

திருவாரூர், ஜூன் 27: திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில் அதிக பட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ 5 ஆயிரத்து 789 விலை கிடைத்தது.டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடியும் அதற்கு அடுத்தபடியாக பச்சை பயிறு மற்றும் உளுந்து சாகுபடி பணிகளை மட்டும் விவசாயிகள் மேற்கொண்டு வந்த நிலையில் கால சூழ்நிலைக்கு ஏற்ப மாற்று பயிர்களையும் பயிரிடும் நிலைக்கு மாறினர். அதன்படி நெல் சாகுபடியடுத்து பச்சை பயிறு மற்றும் பருத்தி பயிர், வாழை, கரும்பு, கடலை, மரவள்ளி கிழங்கு உட்பட பல்வேறு பயிர்களையும் சாகுபடியையும் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி நடப்பாண்டில் திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரம் ஏக்கரில் பருத்தி பயிரினை விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நிலையில் இந்த பயிர்கள் அனைத்தும் தற்போது அறுவடைக்கு தயாராகியுள்ள நிலையில் அதிலிருந்து பஞ்சுகளை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் விவசாயிகளின் இந்த பருத்தி பஞ்சுகள் அனைத்தும் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலமாக வியாபாரிகளை கொண்டு ஏல முறையில் கொள்முதல் செய்யப்படும் நிலையில் நடப்பாண்டில் இதற்கான கொள்முதல் ஏலத்தினை கடந்த 11ம் தேதி கலெக்டர் ஆனந்த் துவக்கி வைத்தார். அதன்படி குடவாசல் மற்றும் திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமைகளில் குடவாசலில் காலை 11 மணிக்கும், திருவாரூரில் மாலை 3 மணிக்கும் நடைபெறுகிறது. இதேபோல் வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் புதன்கிழமையன்று மாலை 3 மணியளவில் இந்த ஏலமானது நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பருத்தி கழகம் மற்றும் திருப்பூர், கோவை, விழுப்புரம், தேனி, திண்டுகல், தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் கலந்து கொள்ளும் நிலையில் கலெக்டர் துவங்கி வைத்த முதல் நாளிலேயே தங்களுக்குரிய விலை கிடைக்கவில்லை என கூறி விவசாயிகள் அலுவலர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில் 3வது வாரமாக திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று முன்தினம் துவங்கிய ஏலமானது நேற்று மாலை வரையில் நடைபெற்றது. இதில் விவசாயிகளிடமிருந்து மொத்தம் 3 ஆயிரத்து 379 குவிண்டால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ 5 ஆயிரத்து 789ம், குறைந்த பட்சமாக ரூ 5 ஆயிரத்து 252 மற்றும் சராசரியாக ரூ 5 ஆயிரத்து 543 விலை கிடைத்ததாக விற்பனை கூடத்தின் செயலாளர் வித்யா தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...