போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

கும்பகோணம், ஜூன் 27: கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் உட்கோட்ட காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடந்தது. டிஎஸ்பி ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமை வகித்தனர். ஆடுதுறை தனியார் பள்ளி, திருவிடைமருதூர் திருவாவடுதுறை ஆதின மேல்நிலைப்பள்ளி, மேலஅம்மாசத்திரத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் சர்வதேச போதை ஒழிப்பு கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியில் பள்ளி மாணவர்கள், மதுவை ஒழிப்போம், போதை பொருளை தடுப்போம், கடத்தல் போதை பொருட்களை தடுப்போம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு மாணவர்கள் சென்றனர். மேலும் பேரணி முடிந்தவுடன் மனித சங்கிலியாக நின்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியில் 50க்கும் மேற்பட்ட போலீசார், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் நேற்று நகர காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. மணிக்கூண்டு பகுதியிலிருந்து புறப்பட்ட பேரணியை ஆர்டிஓ பூங்கோதை துவக்கி வைத்தார். டிஎஸ்பி கணேசமூர்த்தி தலைமையில் புறப்பட்ட பேரணியில் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் முருகானந்தம், வேலுச்சாமி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியைகள் கவிதா, கரோலின் வித்யராணி மற்றும் திரளான மாணவர்கள் பங்கேற்றனர். பாபநாசம்: பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காவல்துறை சார்பில் உலக போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை பாபநாசம் டிஎஸ்பி நந்தகோபால் துவக்கி வைத்தார். பள்ளி தலைமையாசிரியர் மணியரசன், உதவி தலைமையாசிரியர் ரமேஷ், தேசிய மாணவர் படை அலுவலர் செல்வகுமார், இளையோர் செஞ்சிலுவை சங்க அலுவலர் சரவணன் பங்கேற்றனர். முன்னதாக பள்ளி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் டிஎஸ்பி நந்தகோபால், இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் பேசினர். பின்னர் போதை ஒழிப்பு உறுதிமொழியை பாபநாசம் டிஎஸ்பி வாசிக்க மாணவர்கள் எடுத்து கொண்டனர்.

பேராவூரணி: பேராவூரணி காவல்துறை சார்பில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின பேரணி நடந்தது. பேரணியை எஸ்ஐ அருள்குமார் துவக்கி வைத்தார். நீலகண்டப்பிள்ளையார் கோயிலில் இருந்து கடைவீதி வழியாக தாலுகா அலுவலகம் வரை பேரணி சென்றடைந்தது.

Related Stories: