×

குடியிருப்பு பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்ததற்கு எதிர்ப்பு

உத்திரமேரூர், ஜூன் 27: உத்திரமேரூர் பேரூராட்சி பட்டஞ்சேரி, நீரடி, குப்பயநல்லூர், வேடபாளயம், காக்கயநல்லூர், ஆணைப்பள்ளம், சோமநாதபுரம், மல்லியகரணை  மல்லிகாபுரம், பருத்தி கொள்ளை, நல்லூர், வாடாநல்லூர் ஆகிய பகுதிகளை  உள்ளடக்கி 18 வார்டுகள் உள்ளன. இங்கு 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசிக்கின்றனர்.இங்குள்ள மக்களின் குடிநீர் தேவைக்கு 9 கிமீ தொலைவில் வெங்கச்சேரியில் உள்ள செய்யாற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, பைப் லைன் மூலம் உத்திரமேரூரில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் ஏற்றி, தண்ணீர்  வினியோகம் செய்யப்படுகிறது.மேலும் கோடைகாலத்தில் குடிநீர் பிரச்னையை சமாளிக்கும் வகையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் உத்திரமேரூர் ஏரியில் 5 ஆழ்துளை கிணறுகள் அமைத்து, தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.பருவமழை கைவிட்டதால், கடந்த 3 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் 2 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்ட குடிநீர், தற்போது 20 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள்  குடிநீருக்காகவிவசாய கிணறுகளில் இருந்தும், சிலர் குடிநீரை பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குடிநீர் பிரச்னையை சமாளிக்க பேரூராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் அளித்த புகாரின்படி, 17வது வார்டு திக்காக்குளம் குடியிருப்பு பகுதிகளில் 4 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன. இந்த ஆழதுளை கிணறுகள் மூலம் தண்ணீர்  உறிஞ்சப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து அப்பகுதி மக்களுக்கு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.மேலும் பேரூராட்சி சார்பில் 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வருவதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமம் அடைகின்றனர். எனவே, இந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து நீர் எடுக்கக்கூடாது என அப்பகுதி மக்கள் கூறி வந்தனர். ஆனால்,  அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதை தடுக்க வலியுறுத்தி, உத்திரமேரூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு, மேற்கண்ட பகுதி மக்கள் திரண்டனர். அங்கு, தங்ளது கோரிக்கையை வலியுறுத்தி முற்றுகையிட்டு  கோஷமிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து, அதிகாரிகள் அங்கு சென்று, பொதுமக்களிடம் சமரசம் பேசினர். அப்போது, அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். பின்னர், அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிப்போம் என தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு