×

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சிஐடியு சார்பில் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம்

மதுராந்தகம், ஜூன் 27: குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் சிஐடியு சார்பில், பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் சிஐடியு ஆகியவை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.மதுராந்தகம் நகரை சுற்றி நிலத்தடி நீர் குறைந்து விட்டதால், நகராட்சிக்கு சொந்தமான கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. 2 நாட்களுக்கு ஒருமுறை அரைமணி நேரம் மட்டுமே குடிநீர்  விநியோகம் செய்யப்படுகிறது.இதேபோல் நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளிலும் 246 ஆழ்துளை கிணறு கைப்பம்புகள் உள்ளன. அதில் நூற்றுக்கும் மேற்பட்டவை பழுதாகி உள்ளன. இதுபோன்ற குடிநீர் பஞ்சத்தை நிரந்தரமாக போக்க மாநிலத்தில் உள்ள பெரிய ஏரிகளின்  வரிசை பட்டியலில் 6 இடத்தில் உள்ள மதுராந்தகம் ஏரியை தூர்வாரி ஆழப்படுத்துவதை தவிர வேறு வழியில்லை.

இந்த பணியினை அதிகாரிகள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். பழுதான ஆழ்துளை கிணறுகள், கை பம்புகளுக்கு உடனே மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும். பாலாற்றில் இருந்து மேல்மருவத்தூர் செல்லும் தண்ணீரை கோடை  காலங்களில் மதுராந்தகம் நகருக்கு வினியோகம் செய்ய வேண்டும்.கிளியாற்றில் குறிப்பிட்ட இடைவெளிகளில் பல தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று அதிகாரிகளை வலியுறுத்தும் வகையில், பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம், கடந்த 23ம் தேதி தொடங்கி நேற்று நிறைவவடைந்தது.இதில் மதுராந்தகம் நகருக்கு உட்பட்ட  6000 பேர் கையெழுத்திட்டனர் . பொதுமக்களின் கையெழுத்துடன் கூடிய கோரிக்கை மனுக்கள் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என   சிஐடியு காஞ்சிபுரம் மாவட்ட துணை  தலைவர் மாசிலாமணி தெரிவித்தார்.

Tags :
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...