×

திருப்பூரில் இருந்து முதற்கட்டமாக 5 மெட்ரிக் டன் மின் கழிவுகள் சென்னைக்கு அனுப்பப்பட்டது

திருப்பூர், ஜூன் 26:  திருப்பூரில் இருந்து முதற்கட்டமாக சென்னைக்கு 5 மெட்ரிக் டன் மின் கழிவுகள் மாநகராட்சி மூலமாக அனுப்பப்பட்டது.திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. சேகரமாகும் குப்பைகள் வெவ்வெறு பகுதிகளில் உள்ள பாறைக்குழியில் கொட்டப்படுகிறது. ஆனால் குப்பைகளை கொட்டுவதற்கு போதுமான பாறைக்குழி வசதிகள் இல்லை. இதனால் அடிக்கடி குப்பை பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் குப்பைகளை தரம் பிரிக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.  மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிக்கும் பணிகளை மாநகராட்சி பணியாளர்கள் செய்து வருகின்றனர். இதன்படி திருப்பூர் மாநகராட்சி மூலமாக சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகள் அந்தந்த வார்டுகளிலேயே குப்பை நுண் உரமாக்கல் மையம் மூலமாக உரமாக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மக்காத குப்பைகள் சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகிறது. இதேபோல் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உருவாகும் மின் கழிவுகள் மாநகராட்சி மூலமாக சேகரிக்கப்பட்டு சென்னை மறுசுழற்சி மையத்திற்கு அனுப்பப்படுகிறது. இதன்படி மாநகராட்சி பகுதிகளில் மின்கழிவுகள் சேகரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் முதற்கட்டமாக நேற்று முன்தினம் திருப்பூர் மாநகராட்சியில் இருந்து 5 மெட்ரிக் டன் சென்னை மறுசுழற்சி மையத்திற்கு வேன் மூலமாக அனுப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் சிவகுமார், மாநகர நல அலுவலர் டாக்டர் பூபதி, 1வது மண்டல சுகாதார அலுவலர் முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED தொழிலாளர்கள் வாக்களிக்க சொந்த...