×

பயணிகளை ஏற்றாமல் மேம்பாலத்தில் சென்ற அரசு பேருந்தை சிறைபிடித்த மக்கள்

கோவை, ஜூன் 26: கோவை, கிணத்துக்கடவு அருகே சர்வீஸ் ரோட்டில் சென்று
பயணிகளை ஏற்றாமல் சென்ற அரசு பஸ்ஸை மேம்பாலத்தில் பொதுமக்கள் சிறை பிடித்தனர். கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு  ஒத்தக்கால் மண்டபம், கிணத்துக்கடவு வழியாக தினமும் 100க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொள்ளாச்சி - கோவை இடையே உள்ள சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. இதற்காக ஈச்சனாரி உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையே சாலை விரிவாக்க பணிகள் நடப்பதால் பொள்ளாச்சி மார்க்கமாக கோவைக்கு வரும் பஸ்கள் அதிவேகமாக இயக்கப்படுகிறது. இதனால் அரசு போக்குவரத்து கழக கோவை கோட்டம், மதுரை கோட்டம், உள்ளிட்ட பஸ்கள் விரைவாக கோவைக்கு வர ஒத்தக்கால் மண்டபம், கிணத்துக்கடவு பகுதியில் சர்வீஸ் சாலையில் செல்லாமல் மேம்பாலத்தின் வழியாக செல்வதாகவும், இதனால் கிணத்துக்கடவு மற்றும் ஒத்தக்கால் மண்டபம் சுற்றுபகுதி மக்கள் கோவை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் நேற்று கோவையில் இருந்து பொள்ளாச்சி, பழனி வழியாக போடிக்கு கிணத்துக்கடவு மேம்பாலத்தின் மீது வந்த மதுரை கோட்டத்தை சேர்ந்த டிஎன் 57 என் 2197 என்ற அரசு பஸ்ஸை அப்பகுதி பொதுமக்களும், பயணிகளும் நடு பாலத்தில் நிறுத்தி சிறைபிடித்தனர். பின் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பஸ் டிரைவர், கண்டக்டர் இனிமேல் சர்வீஸ் ரோட்டில் சென்று பயனிகளை ஏற்றி செல்வதாக உறுதியளித்தனர். அதையடுத்து அரசு பஸ்ஸை பொதுமக்கள் எச்சரித்து விடுவித்தனர்.

இது குறித்து கிணத்துக்கடவு பொதுமக்கள் கூறும் போது, அரசு பஸ்கள் சாலை விரிவாக்க பணியை காரணம் காட்டி கிணத்துக்கடவு, ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் சர்வீஸ் சாலையில் வந்து பயனிகளை ஏற்றி செல்லாமல் மேம்பாலத்தின் மீது செல்கின்றன. இதனால் பல கிராம மக்கள் பஸ் இருந்தும் பயனிக்க முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். இது குறித்து அரசு போக்குவரத்து கழக கோவை கோட்ட மேலாண் இயக்குநர் கிணத்துக்கடவு, ஒத்தக்கால் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் சர்வீஸ் ரோட்டில் சென்று பயனிகளை ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும், என தெரிவித்தனர்.

Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்