புஞ்சைபுளியம்பட்டி அருகே குடிநீர் கேட்டு திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

சத்தியமங்கலம், ஜூன் 26: குடிநீர் கேட்டு பவானிசாகர் ஒன்றிய திமுக சார்பில் புஞ்சைபுளியம்பட்டி அருகே  தேசிபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பவானிசாகர் ஒன்றிய செயலாளர் முத்துசாமி தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் சுப்ரமணியம் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் புங்கம்பள்ளி கிராமத்தை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் கடும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுவதை கண்டுகொள்ளாமல் உள்ள அதிமுக அரசை கண்டித்து கண்டன கோஷமிட்டனர். தொடர்ந்து குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர் கீதா நடராஜன், பவானிசாகர் ஒன்றிய துணைச்செயலாளர் காளியப்பன், பவானிசாகர் பேருர் கழக செயலாளர் மோகன், தேசிபாளையம் ஊராட்சி செயலாளர் முரளிகுமார், துரைசாமி, திமுக நிர்வாகிகள் மற்றும் புங்கம்பள்ளி பகுதி பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

அந்தியூர்: அந்தியூரில் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு 28 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்களுக்கு தேவையான குடிநீர் பவானி மற்றும் காவிரி ஆறுகளில் இருந்து எடுக்கப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்பட்டு விநியோகம் செய்யபடுகிறது. தற்போது இரண்டு ஆறுகளிலும் கடும் வறட்சியால் தண்ணீர் வற்றி குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு உள்ளது. இதைக்கண்டித்து அந்தியூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு நகர திமுக சார்பில் காலி குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்தியூர் ஒன்றிய திமுக செயலாளர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். திமுக மாநில விவசாய அணி துணை செயலாளர் கள்ளிப்பட்டி மணி, வடக்கு மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் செபஸ்டியான், பேரூர் கழக பொறுப்பாளர் காளிதாஸ், பேரூர் கழக துணைச் செயலாளர் சாக்கு பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: