×

சிவகாசியில் கிருதுமால் ஓடையை தூர்வாராததால் சாலைகளில் தேங்கும் கழிவுநீர்

சிவகாசி, ஜூன் 26: சிவகாசியில் கழிவுநீர் செல்லும் கழிவுநீர் ஓடையை தூர்வாராததால், சாலைகளில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை உருவாக்குகிறது.சிவகாசி நகரில் பெரும்பாலான வீடுகளில் வெளியேறும் கழிவுநீர், கிருதுமால் ஓடை வழியாக சென்று மீனம்பட்டி கண்மாயில் கலக்கிறது. இக்கண்மாயை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரவில்லை. இதனால், நகரின் பல இடங்களில் கழிவுநீர் வீடுகளுக்குள்ளும், தெருக்களிலும் மழை காலங்களில் பெருக்கெடுத்து ஓடுகிறது. சிறிய மழைக்கே கழிவுநீர் சாலைகளில் தேங்கி சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருகிறது.
நகரில் டெலிபோன் எக்சேஞ்ச் எதிரே கிருதுமால் ஓடையே தெரியாத அளவுக்கு முட்செடிகள், கோரைப்புற்கள் வளர்ந்துள்ளன. இதனால், கந்தபுரம் தெரு, முஸ்லீம் நடுத்தெரு, சீதக்காதி தெரு, அண்ணா காலனி பகுதிகளில் வெளியேறும் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. அப்பகுதியில் உள்ள ஓட்டல் கடை உரிமையாளர்கள், இறைச்சி கடைக்காரர்கள் கழிவுகளை கிருதுமால் ஓடையில் கொட்டி செல்கின்றனர். இதனால் சுகாதாரக்கேடு உண்டாகி, அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதனால், அரசு அலுவலகத்தில் அமர்ந்து பணி செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர்.
மேலும், நகரில் தனியார் ஆண்கள் பள்ளி அருகே, வீடுகளில் இருந்து வெளியேம் கழிவுநீர் அப்பகுதியில் உள்ள சாலையில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர். மழை பெய்தால் மழைநீர் கழிவுநீருடன் சேர்ந்து சாலையில் ஓடுகிறது.சிவகாசி நகரின் முக்கிய கழிவுநீர் ஓடையான கிருதுமால் ஓடையை தூர்வாராமல் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். பெரிய மழை பெய்தால் சிவகாசி நகரின் முக்கிய இடங்களில் குளம் போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. எனவே, சிவகாசி கிருதுமால் ஓடையை போர்க்கால அடிப்படையி–்ல் தூர்வார நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சிக்கு...