×

அருப்புக்கோட்டையில் கண்மாயில் கலக்கும் சாயக்கழிவுநீர் கண்டுகொள்ளாத மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

அருப்புக்கோட்டை, ஜூன் 26: அருப்புக்கோட்டையில், கண்மாயில் சாயக் கழிவுநீர் கலப்பதால், அந்த நீர்நிலை பாழாகி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கண்டுகொள்ளாமல் உள்ளது.அருப்புக்கோட்டையில் 25க்கு மேற்பட்ட சாயப்பட்டறைகள் உள்ளன. இங்கு நெசவு நூல்களுக்கு கெமிக்கல் கலந்த கலர் சாயங்கள் ஏற்றப்படுகிறது. நூல்களுக்கு சாயம் ஏற்றிய பின், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிகளின்படி, சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு பிளாண்ட் மூலம், சுத்தம் செய்து வெளியேற்ற வேண்டும். ஆனால், ஒரு சில சாயப்பட்டறைகள் மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைப்பிடிப்பதில்லை.நகரில் உள்ள நாகலிங்கா நகர், லிங்கேஸ்வரர் கோயில் 2வது தெருவில் உள்ள சாயப்பட்டறைகளில் நூல்களுக்கு சாயம் ஏற்றப்பட்ட பிறகு, சாயக்கழிவுநீர் குழாய் மூலம் வெளியேற்றப்பட்டு நேரடியாக வாறுகாலில் விடப்படுகிறது. அவ்வாறு வெளியேறும் சாயக்கழிவுநீர் வாறுகாலில் முறையாக செல்லாமல் தெரு முழுவதும் தேங்கி கிடக்கிறது. மேலும், வாறுகால் மூலம் வெளியேற்றப்படும் சாயக்கழிவுநீர் நேரடியாக பெரிய கண்மாயிலும் கலக்கப்படுகிறது. பெரியகண்மாயில் இருக்கின்ற நீரும் கெட்டு பாழாகி வருகிறது. இது குறித்து மாசுக்கட்டுப்பாடு வாரியத்தினர் நடவடிக்கை எடுப்பதில்லை. வாறுகாலிருந்து வெளியேறும் சாயக்கழிவுநீர் அதிகளவில் வெளியேறுவதால் பக்கத்தில் இருக்கும் பிளாட்டுகளில் தேங்குகிறது. இதனால், வீட்டு போர்வெல்களில் நிலத்தடி நீர் மாசுபடுகிறது. மண்ணின் தன்மையும் கெட்டு விடுகிறது. பெரியகண்மாயில் சாயக்கழிவுநீர் கலப்பதால், விவசாயம் பாதிக்கப்படுகிறது.இதனால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து முறையான நடவடிக்கை எடுத்து சாயக்கழிவுநீரை நேரடியாக கண்மாயில் கலக்காமல் தடுக்கவும், சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு பிளாண்ட் அமைத்து சுத்திகரிப்பு செய்யவும், அறிவுறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்...