×

அருப்புக்கோட்டையில் குழாய்களில் கசியும் நீருக்கு காத்திருக்கும் பெண்கள்

அருப்புக்கோட்டை, ஜூன் 26: அருப்புக்கோட்டையில் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவுவதால், குழாய்களில் கண்ணீராக கசியும் தண்ணீரை, பெண்கள் மணிக்கணக்கில் காத்திருந்து வடிகட்டி பிடிக்கும் அவலம் தொடர்கிறது.அருப்புக்கோட்டை நகருக்கு வைகை, தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதில், வைகை வறண்டதால் தாமிரபரணி மூலம், கிடைக்கும் குடிநீரை மாதம் ஒரு முறை விநியோகம் செய்கின்றனர். தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவு குடிநீரை, வடிகால் வாரியம் வழங்குவதில்லை. 20 லட்சம் லிட்டர் தண்ணீர்தான் வழங்குகிறது. இதை வைத்து பொதுமக்களுக்கு நகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது.நகரில் நிலத்தடி நீர் அதலபாதாளத்தில் உள்ளது. வீட்டு போர்வெல்களில் தண்ணீர் சரியாக வருவதில்லை. தனியார் லாரிகளில் குடிநீரை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதனால், தண்ணீருக்காக பொதுமக்கள் குடங்களுடன் ஆங்காங்கே அலைந்து திரிகின்றனர்.

மல்லாங்கிணறு, கல்குறிச்சி, காரியாபட்டிக்கு செல்லும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பகிர்மான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அருப்புக்கோட்டை ரயில்வே பீடர் ரோட்டில் தண்ணீர் கசிந்து வருகிறது. இந்த தண்ணீரை அப்பகுதி பெண்கள் பலமணி நேரம் காத்திருந்து வடிகட்டி பிடித்து செல்கின்
றனர்.இது குறித்து பெண்கள் கூறுகையில், ‘நகராட்சி மூலம் மாதம் ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இது போதுமானதாக இல்லை. கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் வேளையில், அதிகாரிகளின் அலட்சியத்தால் குழாய்களில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. உடைப்பு ஏற்பட்டு கசியும் தண்ணீரை பல மணிநேரம் காத்திருந்து பிடிக்க வேண்டியுள்ளது. என்று தீருமோ எங்களது தண்ணீர் பஞ்சம்’ என்றனர்.

Tags :
× RELATED தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்...