சுருக்கு வலை தடை விவகாரம் இரு தரப்பு மீனவர்கள் கடும் மோதல்

புதுச்சேரி, ஜூன்  26:  சுருக்கு வலைக்கு தடை விதிப்பது தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் இரு தரப்பு மீனவர்களிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. எம்எல்ஏக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூட்டம் பாதியிலே முடிந்தது.

இந்தியா  முழுவதும் சுருக்கு வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் தடையை மீறி சுருக்கு வலைகளை பயன்படுத்தி, மீன்பிடித்தால், வலைகள் மற்றும் சாதனங்கள், படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால்  புதுச்சேரியில் சுருக்கு வலை தாரளமாக பயன்படுத்தப்படுகிறது. இதற்கு ஆதரவாக ஒரு  தரப்பும், சுருக்கு வலைக்கு எதிராக மற்றொரு தரப்பும் என இரண்டு பிரிவாக பிரிந்து மீனவர்கள் செயல்பட்டு  வருகின்றனர்.  பெரிய படகுகளில் செல்பவர்கள் வெளியூர் மீனவர்களுடன் சிண்டிகேட் அமைத்துக்கொண்டு சுருக்கு வலைகளை  பயன்படுத்தி மீன் பிடிப்பதால் மீன் இனம் முழுவதுமாக அழிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

 பைபர் படகு மற்றும் சிறிய படகுகளில் சென்று  மீன் பிடிப்பவர்கள் போதிய மீன்கள் கிடைக்காமல் தொழில் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறது. பெரிய அளவில் இருக்கும் சுருக்கு வலைகளை பயன்படுத்துவதால், துறைமுகத்தில் இடநெருக்கடி மற்றும் இந்த வலையில் சிக்கும் சிறிய  மீன்களை துறைமுகத்தில்லே வீசுவதால் சுற்றுச் சூழல் மாசுபடுவதாக ஒரு தரப்பு  மீனவர்கள்  குற்றம்சாட்டி வருகின்றனர். சுருக்கு வலை பயன்படுத்துதலை தடுக்க மீன்வளத்துறை அமைச்சர் மல்லாடி  கிருஷ்ணாராவ் தலைமையில் அனைத்து பகுதி மீனவர்கள் ஆலோசனை கூட்டம் சட்டசபை கமிட்டி ஹாலில் நேற்று நடந்தது. கூட்டத்தில் எம்எல்ஏக்கள் அனந்தராமன்,  தனவேலு, ஜெயமூர்த்தி, அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.சுருக்கு வலைகளை உள்ளூர் மீனவர்கள் பயன்படுத்துவதில்லை. குறிப்பிட்ட சில வெளியூர்காரர்கள் உதவியுடன் புதுச்சேரியில் பயன்படுத்துகின்றனர். மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சுருக்கு  வலைக்கு தடை விதிக்க வேண்டும் என ஒரு தரப்பு வலியுறுத்தியது.

ரூ.1.50 லட்சம்   அதிக விலை கொடுத்து சுருக்கு வலைகளை வாங்கி தொழில் நடத்துகிறோம். திடீரென தடை விதித்தால், நாங்கள் என்ன செய்வோம் என மற்றொரு தரப்பினர் கூறினர்.அப்போது அமைச்சர் முன்னிலையில் இருதரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  தொடர்ந்து இருதரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழல் உருவானதால், அங்கிருந்த  எம்எல்ஏக்கள் அவர்களை சமாதானம் செய்ய முயன்றனர்.

அப்போது அனந்தராமன் எம்எல்ஏவிடம் ஒரு சிலர் வாக்குவாதம் செய்தனர். அப்போது எம்எல்ஏவுக்கு ஆதரவாக மற்றொரு எம்எல்ஏ தனவேலு, அவர்களை கடுமையாக எச்சரித்தார். இது உங்கள் பிரச்னை, சுமூகமாக பேசி முடிவு எடுக்கலாம் என கூட்டத்தை நடத்தினால், எம்எல்ஏக்களை பற்றி பேசுவதை அனுமதிக்க முடியாது, என்றார்.

தகவலறிந்த முதல்வர்  நாராயணசாமி  வேகமாக விரைந்து வந்தார். சுருக்கு வலைகள் பயன்படுத்துவது  குறித்த அரசு  இறுதி முடிவெடுக்கும் எனக்கூறி கூட்டத்தை கலைத்தார். இதனால் எந்த முடிவும் எடுக்காமல் கூட்டம் முடிந்து போனது.

இது தொடர்பாக கூட்டத்தில் கலந்து  கொண்ட ஒரு எம்எல்ஏவிடம் கேட்டபோது, இந்த கூட்டம்  மீனவர்களை  அழைத்து மீன்வளத்துறை அதிகாரிகளே பேசி முடிக்க வேண்டிய பிரச்னை. தேவையில்லாமல் எம்எல்ஏக்களை அழைத்தது தவறு.

 யாராவது ஒரு தரப்புக்கு ஆதரவாக பேசினால் இதில்  பிரச்னை ஏற்படும். சுருக்கு வலைக்கு இந்தியா  முழுவதும் தடை இருக்கிறது. நாம் இதில் என்ன செய்ய முடியும். இந்த பிரச்னை சுமூகமாக முடிக்க சிறிது கால அவகாசம் வழங்கி சுருக்கு வலையை தடை  செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் மீனவர்கள்  பாதிக்காதவாறு சுருக்கு வலைக்கு இழப்பீடு கொடுத்து, உடனே தடை விதிக்கலாம்,  என்றார்.

Related Stories: