விவசாயிகள் வண்டல் மண் எடுத்து கொள்ள அனுமதி ஏரி, குளங்களை இம்மாத இறுதிக்குள் தூர்வார உத்தரவு

புதுச்சேரி, ஜூன் 26: நீர் நிலைகளை பாதுகாத்தல், நிலத்தடி நீர் மட்டத்தை  உயர்த்துதல், குடிநீர் தட்டுப்பாட்டை போக்குதல் குறித்த ஆலோசனை கூட்டம்  முதல்வர் நாராயணசாமி தலைமையில்  தலைமை செயலக கருத்தரங்கு  கூடத்தில் நடந்தது. அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி  கிருஷ்ணாராவ், கமலக்கண்ணன், தலைமை செயலர் அஸ்வனிகுமார், மாவட்ட ஆட்சியர்  அருண்  உள்ளிட்ட பல்வேறு அரசுத்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  கூட்டத்துக்கு பின்னர் பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:   புதுவை  மாநிலத்தில் குடிநீர்  தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்கும் வகையில், பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.  தரமான  குடிநீரை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்க வேண்டுமென கூட்டத்தில்  முடிவெடுக்கப்பட்டது. குடிநீர் தட்டுப்பாடு நிலவும்  பகுதியில் நகராட்சி, கொம்யூன் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு பிரச்னையை  தீர்க்க வேண்டும். பருவமழை நெருங்கி வரும் நிலையில் ஏரி, குளங்கள்,  நீர் நிலைகளை தூர்வாருவதற்கான நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டு வருகிறது.  இம்மாத இறுதிக்குள் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள பணிகளை விரைந்து முடிக்க  உத்தரவிட்டுள்ளேன்.

நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கவும், எதிர்காலத்தில்  குடிநீர் பிரச்னையை சமாளிக்கும் வகையில் அனைத்து விதமான நடவடிக்கைகளையும்  அரசு எடுக்கும். இதற்கான சாத்திய கூறுகள் அனைத்தையும் ஆராய்வதற்கு மாவட்ட  ஆட்சியர் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள்  பங்களிப்போடு, இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும். குடிநீர் தட்டுப்பாடு  இருந்த ரெயின்போ நகர், சாமிபிள்ளைதோட்டம், கருவடிக்குப்பம், வில்லியனூர்  உள்ளிட்ட பகுதிகளில் போர்வெல் போடப்பட்டுள்ளது. கடல் நீரை குடிநீராக்கும்  திட்டமும் அரசின் பரிசீலனையில் உள்ளது. ஏற்கனவே 20 ஏரிகள், 32 குளங்கள்  தூர்வாருவதற்கு ரூ.16.72 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 16 ஏரிகள், 3 குளங்கள்  தூர்வாரப்பட்டுள்ளன. மீதம் உள்ள குளங்கள், ஏரிகள் ஒரு மாத காலத்தில்  தூர்வாரப்படும். மற்ற ஏரிகளையும் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள்  பங்களிப்புடன் தூர்வாருவதற்கு நடவடிக்கைகளை அரசு துவங்க இருக்கிறது.

குறிப்பாக,  ஏரிகளில் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்துக் கொள்ள அனுமதி  வழங்கப்படும். ஏற்கனவே இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  காரைக்காலில் இந்த திட்டம் மிகசிறப்பான முறையில் செயல்படுத்தப்படுகிறது. புதுச்சேரியில் இதுவரை எந்த விவசாயியும் அனுமதி கோரவில்லை. வருவாய் துறையில் அனுமதி பெற்றால் விதிகளுக்கு உட்பட்டு வண்டல் மண்  அள்ளிக் கொள்ள உடனடியாக அனுமதி வழங்கப்படும். புதுச்சேரி, காரைக்காலில்  வறட்சி குறித்து அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். அப்பணிகள்  முடிந்த பின்னர் அதன்மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.  கோனேரிக்குப்பத்தில் படுகை அணை கட்டப்படுகிறது. மேலும் சில இடங்களில் படுகை  அணை கட்டுவதற்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டு வருகிறது. ஸ்மார்ட்  சிட்டி திட்டத்தின் கீழ் 20 திட்ட பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள்  துவங்கி நடந்து வருகிறது.

வாட்டர் ஏடிஎம், இ- டாய்லெட், நகரப் பகுதியில்  மிதிவண்டி ஆகிய பணிகள் விரைவுப்படுத்தப்படும். நகரமைப்பு குழுமத்தில்  வீடுகள், வணிக நிறுவனங்கள் கட்டிடங்கள் கட்டும்போது மழை நீர் சேகரிப்பு  அமைப்பு கட்டாயம் இருக்க வேண்டும் என்ற வகையில் விதிகள்  திருத்தப்பட்டுள்ளது. ஆனால் வீடு கட்டுவதற்கு அனுமதி வாங்குபவர்கள் வீடு  கட்டி முடித்தவுடன் இறுதி அனுமதியை வாங்குவதில்லை. எதிர்காலத்தில் இதை  கண்காணித்து கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

காரைக்காலில்  வெளிநாட்டில் இருந்து 55 டன் மணல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 7  நிறுவனங்களுக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அரசின் சார்பில்  இன்னும் கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை.

அரசுக்கு நிதி நெருக்கடி இருப்பதால்  மணலை வாங்கி அரசே விற்பனை செய்ய இயலாத நிலை உள்ளது. எனவே, அவர்களே கட்டணம்  நிர்ணயம் செய்து விற்றுக் கொள்ளலாம். காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு  மணல் கொண்டு வருவதில் நடைமுறை சிக்கல் உள்ளது. மாநிலம் விட்டு மாநிலம் மணல்  எடுத்து வர தடை உள்ளது. எனவே தமிழக அரசுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: