சீரான குடிநீர் வழங்காததை கண்டித்து கோவில்பட்டி யூனியன் அலுவலகம் முற்றுகை

கோவில்பட்டி, ஜூன் 26:இலுப்பையூரணி பஞ்சாயத்தில் சீரான குடிநீர் வழங்காததை கண்டித்தும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகளுக்கான ஊதியத்தை காலதாமதமின்றி வழங்கவும் வலியுறுத்தி கிராம மக்கள் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி பஞ்சாயத்திற்கு உட்பட்ட லாயல்மில் காலனி, என்ஜிஓ காலனி, வடக்கு இலுப்பையூரணி, சண்முகாநகர், தாமஸ்நகர், மறவர் காலனி, கடலையூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வாரத்திற்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது சீராக சீவலப்பேரி குடிநீர் வழங்கப்படவில்லை.  இதனால் கிராம மக்கள் ஒரு குடம் தண்ணீர் ரூ.10 வரை விலை கொடுத்து வாங்குகின்றனர். மேலும் தண்ணீருக்காக கிராம மக்கள் தினமும் சிரமப்பட்டு வருகின்றனர். சீரான குடிநீர் வழங்கக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

இந்நிலையில் இலுப்பையூரணி பஞ்சாயத்திற்கு உட்பட்ட இப்பகுதிகளில் சீவலப்பேரி குடிநீர் சீரான வழங்கவும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் காலதாமதமின்றி ஊதியம் வழங்கவும், அரசின் உத்தரவின்படி நடப்பாண்டிற்கான முழுமையான வேலைநாட்கள் பணி வழங்கிடவும், குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கவும் வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் திமுக வடக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சந்தானம் தலைமையில் சமூக ஆர்வலர் அய்யாச்சாமி முன்னிலையில் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதையடுத்து கிராம மக்கள் கோரிக்கை மனுவை, வட்டார வளர்ச்சி அலுவலர் கிரியிடம் வழங்கினர். அவர், இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

  இதேபோல் கிளவிபட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிழவிபட்டி, செண்பகபேரி, துரைச்சாமிபுரம் கிராம மக்கள் தங்களது பஞ்சாயத்து தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கவும், இத்திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் ஊதிய பாக்கி தொகையை உடனடியாக வழங்கக்கோரி கிராம மக்கள் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி, கோரிக்கை மனுவை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வழங்கினர்.

இதில் விவசாய தொழிற்சங்க பொறுப்பாளர் சித்ரா, விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணி, மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் முத்துகாந்தாரி, மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் ஜோதிபாசு, நகர செயலாளர் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: