தேசிய ஊரக திட்டத்தில் வேலை கேட்டு திருச்செந்தூர், செய்துங்கநல்லூரில் மனு கொடுக்கும் போராட்டம்

உடன்குடி, ஜூன் 26:  தேசிய ஊரக வேலைவாய்ப்பு  திட்டத்தில் 100 நாட்கள் வேலைக்கு வரும் அனைவருக்கும் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும், அனைத்து பகுதி மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. திருச்செந்தூரில் நடந்த போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் முத்துகுமார், ஒன்றிய தலைவர் துரைராஜ்  முன்னிலை வகித்தனர். இதில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 100 நாள் வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்கிடவேண்டும், தாமதமின்றி பாக்கி சம்பளத்தை வழங்கிடவும், சட்டக்கூலி 229ரூபாயை குறைக்காமல் வழங்கவேண்டும், வேலை செய்த 15நாட்களுக்குள் சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் இசக்கியப்பனிடம் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட அவர் தகுதியுள்ளவர்களுக்கு வேலை வழங்கப்படும். மரக்கன்று நடும் பணிக்கு தான் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது மேலும் பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது என கூறி மனு அளிக்க வந்தவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இதில் சிவதாணுதாய், சந்திரசேகர், வள்ளிம்மாள், முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். செய்துங்கநல்லூர்: நூறு நாள் வேலைக்கு வரும் அனைவருக்கும் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி    கருங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் சண்முகராஜ் தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் மாரியப்பன் விளக்கவுரையாற்றினார்.  ஒன்றிய தலைவர்  ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.  நூறு நாள் வேலைக்கு வரும் அனைவருக்கும் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும் உள்பட 13 கோரிக்கையை வலியுறுத்தி  ஒன்றிய ஆணையாளரிடம் மனு கொடுக்கப்பட்டது. முன்னதாக பெண்கள் அலுவலக வளாகத்தில் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். இதில்  ஒன்றிய செயலாளர் மணி, கொம்பையா, கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் ராஜ் குமார், ஒன்றிய தலைவர் பெருமாள் ஒன்றியக்குழு வைரமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: