கழுகுமலையில் திமுக பொதுக்கூட்டம் சட்டசபையில் குடிநீர் பிரச்னை குறித்து பேசினால் கேட்க மறுக்கும் தமிழக அரசு

கழுகுமலை. ஜூன் 26: தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து சட்டசபையில் பேசினால் அதிமுக அரசு அதனை கேட்பதில்லை என கீதாஜீவன் எம்எல்ஏ குற்றம் சாட்டினார். கழுகுமலையில் கருணாநிதி பிறந்த நாள் விழா, கனிமொழி எம்பிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடந்தது. மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கயத்தார் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் கருப்பசாமி, ஒன்றிய அவைத் தலைவர் மாரியப்பன், முருகன் கூட்டுறவு பண்டகசாலை முன்னாள் தலைவர் கிருஷ்ணன், அவைத்தலைவர் கந்தசாமி, மாவட்ட நெசவாளரணி துணை அமைப்பாளர் தங்கராஜ், மாவட்ட பிரதிநிதி பாஸ்கர் முன்னிலை வகித்தனர். கொள்கை பரப்பு துணைச்செயலாளர் குடியாத்தம் குமரன் பேசினார்.

கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ பேசுகையில், உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால்தான் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கும். தமிழகம் எங்கும் தண்ணீர் பஞ்சம். அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் குடங்களுடன் அரசு அலுவலகங்களை நோக்கி போராட்டம் நடத்தக்கூடிய நிலை உள்ளது. கேரள முதல்வர் தமிழகத்திற்கு தருவதாக கூறிய தண்ணீரை தமிழக முதல்வர் வேண்டாம் என்று  கூறிவிட்டார்.  இத்தகைய சூழ்நிலையை விளக்கி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்தே முதல்வர் தமிழகத்தில் கொஞ்சம் குடிநீர் பிரச்னை உள்ளதாக தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் தகுதியுள்ள விண்ணப்பித்த அனைவருக்கும் திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் குடிநீர் பிரச்னை குறித்து சட்டசபையில் பேசினால் கூட தமிழக அரசு அதனை கேட்பதற்கு முன்வரவில்லை.

முதல்வரும், துணை முதல்வரும், அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்ளவே மோடிக்கு சலாம் போடுகின்றனர் என்றார். கூட்டத்தில் ஒன்றிய அமைப்பாளர்கள், பேரூர் நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அமைப்பினை சார்ந்தவர்கள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். மாவட்ட பிரதிநிதி காளிதாஸ் நன்றி கூறினார். ஏற்பாட்டினை கழுகுமலை பேரூர் செயலாளர் கிருஷ்ணகுமார் செய்திருந்தார்.

Related Stories: