தொகுதி வளர்ச்சி நிதியை குடிநீர் தேவைக்கு பயன்படுத்துவேன்

ஓட்டப்பிடாரம், ஜூன் 26: தொகுதி வளர்ச்சி நிதியினை பொதுமக்களின் குடிநீர் தேவைக்கே பயன்படுத்துவேன் என ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா தெரிவித்தார். ஓட்டபிடாரம் யூனியன் அலுவலகத்தில் மக்களின் குடிநீர் பிரச்னைகள், தெருவிளக்கு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் மற்றும் அதனை சரி செய்வது சம்பந்தமாக ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், கிராம ஊராட்சிகளின் செயலாளர்களுடன் சண்முகையா எம்எல்ஏ நேற்று மாலை ஆலோசனை மேற்கொண்டார்.   பின்னர்அவர் கூறுகையில், ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் தற்போது குடிநீர் கிடைக்காமல் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். மேலும் மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றுவதிலும் பல்வேறு குறைகளை அறிந்து ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், கிராம ஊராட்சிகளின் செயலாளர்கள் இணைந்து மக்களின் தேவைகளை அறிந்து உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும்.

மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏதேனும் குறுக்கீடுகள் நிதிப்பற்றாக்குறைகள் இருந்தால் அதுகுறித்து உடனுக்குடன் தன்னை தொடர்புகொண்டு தெரிவித்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து அதனை உடனே நிறைவேற்றித் தர தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.   தனது தொகுதி வளர்ச்சிக்காக வழங்கப்படும் அரசின் நிதியினை மக்களின் அடிப்படை தேவையான குடிநீர் தேவைக்கு மட்டுமே அதிகம் பயன்படுத்துவேன் என்றார்.   ஆலோசனையில் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராமராஜன், ஒன்றிய பொறியாளர்கள், பணிகளின் மேற்பார்வையாளர்கள் மற்றும் ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளின் செயலாளர்களும் கலந்துகொண்டனர்

Related Stories: