×

அம்பை தாலுகாவில் ஜமாபந்தியில் மனு அளிக்க குவிந்த மக்கள் 359 மனுக்களுக்கு உடனடி தீர்வு

அம்பை, ஜூன் 26: அம்பை தாலுகா அலுவலகத்தில், 4 குறுவட்டத்திற்குட்பட்ட 54 கிராமங்களுக்கான  வருவாய் தீர்வாய கணக்கு சரிபார்க்கும் ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த 19ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. நிறைவு நாளான நேற்று, மனு அளிக்க மக்கள் திரண்டு வந்தனர். இதனால் தாலுகா அலுவலகம் முழுவதும் மக்கள் தலையாக காணப்பட்டது. தாசில்தார் வெங்கடேஷ், கூட்டத்தை சரி செய்து மனுக்களை வழங்க ஏற்பாடு செய்தார். ஜமாபந்தியில் நெல்லை சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் சுகி பிரேம்ளா, மக்களிடம் நேரடியாக 874  கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் 359 மனுக்கள் ஏற்கப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டது. 19ம் தேதி கடையம் பிர்காவிற்குட்பட்ட கிராமங்களுக்கும், 20ம் தேதி  ஆழ்வார்குறிச்சி பிர்கா கிராமங்களுக்கும், 21ல்  சிங்கம்பட்டி குறுவட்ட கிராமங்களுக்கும், நேற்று அம்பை குறுவட்டத்திற்குட்பட்ட 14 கிராமங்களுக்கான ஜமாபந்தியும் நடந்தது.

இதில் புதிதாக பட்டா வழங்கல், பட்டா மாறுதல், முதியோர் பென்சன், திருமணம் மற்றும் இளம் விதவை  உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, குடும்ப அட்டை பெயர் மாற்றம் உள்ளிட்ட மொத்தம்  874 மனுக்கள் பெறப்பட்டது. தகுதியான 359 மனுக்கள் ஏற்கப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டது. 515 மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டது. நிகழ்ச்சியில் தாசில்தார் வெங்கட்ராமன், வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கை குழுவினர்கள் சமூக பாதுகாப்பு தாசில்தார் பிரபாகர்அருண்செல்வன், சமூக பாதுகாப்பு துணை தாசில்தார் ரவீந்திரன், தலைமையிடத்து துணை தாசில்தார்கள் சத்யவல்லி, சீதாதேவி, தோட்டக்கலை உதவி இயக்குநர் இளங்கோ, நந்தகுமார், துணை வேளாண் அலுவலர் முருகன், லெட்சுமி, சாமிராஜன், பானுமதி, சாந்தி, வட்டார புள்ளியியல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன்  உள்ளிட்ட வருவாய் ஆய்வாளர்கள், விஏஓக்கள் மற்றும்  பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED தென்காசியில் ராம் நல்லமணி யாதவா கல்லூரி பட்டமளிப்பு விழா