×

திருக்குறுங்குடியில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர் பொதுமக்கள் பாதிப்பு

களக்காடு, ஜூன் 26: திருக்குறுங்குடியில் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி வீணாகி வருவதால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஏர்வாடி பகுதிக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக பத்தமடை தாமிரபரணி ஆற்றில் உறைகிணறு அமைக்கப்பட்டு, அதிலிருந்து நீர் எடுக்கப்பட்டு, பத்மநேரி, கருவேலங்குளம், களக்காடு, சாலைப்புதூர், மாவடி, திருக்குறுங்குடி வழியாக ஏர்வாடிக்கு குழாய்கள் பதிக்கப்பட்டு தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.  இந்நிலையில் திருக்குறுங்குடி சாலையில் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த உடைப்பின் வழியாக தண்ணீர் வெளியேறி அப்பகுதியில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடி வீணாகிறது. தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனால் ஏர்வாடி பகுதியில் குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இப்பகுதியில் கடந்த வடகிழக்கு பருவமழையும், தற்போதைய தென்மேற்கு பருவமழையும் பொய்த்து விட்டதால் கடும் வறட்சி நிலவுகிறது. வெயிலும் சுட்டெரிக்கிறது. இதையடுத்து தண்ணீரின் தேவை அதிகரித்துள்ள நிலையில், குழாய் உடைப்பால் குடிநீர் வீணாகி வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறுவதால் சாலையில் அரிப்பு ஏற்பட்டு பள்ளமும் உருவாகியுள்ளது. இந்த பள்ளத்தில் வாகனங்கள் சிக்கிக் கொள்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. குழாய் உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ள பகுதி தென்காசி- நாகர்கோவில் பிரதான சாலை ஆகும். இந்த சாலையின் வழியாக தினசரி கனரக வாகனங்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து திருக்குறுங்குடி நகர திமுக இளைஞரணி அமைப்பாளர் சங்கரபாண்டி, தகவல் தொழில்நுட்ப அணி 10ம் வார்டு செயலாளர் மாரியப்பன் ஆகியோர் கூறுகையில், ‘கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தகவல் கொடுத்தும், இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப் போக்கை கடைபிடித்து வருகின்றனர். எனவே இனிமேலாவது குழாய் உடைப்பை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags :
× RELATED பனையில் இருந்து விழுந்து தொழிலாளி பலி