×

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,541 அரசு, தனியார் பள்ளிகளில் 4 லட்சம் மாணவர்கள் மழை வேண்டி கூட்டுப் பிரார்த்தனை

* வான்சிறப்பு அதிகார திருக்குறள்களை வாசித்தனர் * காலை இறைவணக்கத்தின்போது 30 நாட்கள் நடக்கிறது

திருவண்ணாமலை, ஜூன் 26: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 4 லட்சம் மாணவர்கள் மழை வேண்டி, வான் சிறப்பு அதிகாரத்தில் உள்ள 10 திருக்குறள்களை வாசித்து சிறப்பு கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் மிகக் கடுமையான வறட்சியும், குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. பருவமழை பொய்த்ததாலும், கோடை காலம் முடிந்த பிறகும் கடும் வெயில் சுட்டெரிப்பதாலும், நீர் மேலாண்மையை முறையாக திட்டமிடாததாலும், இதுவரை எப்போதும் இல்லாத அளவில் இந்த ஆண்டு குடிநீர் பிரச்னை தலை தூக்கியிருக்கிறது. மேலும், நீர்நிலைகள் வற்றிவிட்டன. நிலத்தடி நீர்மட்டம் சரிந்துவிட்டது. ஒருகுடம் தண்ணீருக்காக மக்கள் தவியாய் தவிக்கின்றனர். பல இடங்களில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடப்பது தினசரி வாடிக்கையாக மாறிவிட்டது.

இந்நிலையில், மழை வேண்டி அறநிலையத்துறை சார்பில் கோயில்களில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. கிராமப் பகுதிகளில் மழை வேண்டி சிறப்பு நூதன வழிபாடுகளில் மக்கள் ஈடுபடுகின்றனர். தென்மேற்கு பவருமழை தாமதமானால், குடிநீர் பிரச்னை மிகப்பெரிய அளவில் சிக்கலை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 2,541 அரசு, அரசு நிதியுதவி மற்றும் தனியார் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் சுமார் 4 லட்சம் மாணவர்கள் மழை வேண்டி நேற்று சிறப்பு கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். வழக்கமாக நடைபெறும் காலை இறைவணக்க கூட்டத்தில், திருக்குறளில் உள்ள வான்சிறப்பு அதிகாரத்தில் மழையின் அவசியத்தை போற்றும் 10 குறள்களை மாணவர்கள் வாசித்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். ஒருசில பள்ளிகளில் திருவள்ளுவரை போல வேடமணிந்த மாணவர்கள், இறைவணக்க கூட்டத்தில் குறட்பாக்களை இசையுடன் வாசித்தனர்.

திருவண்ணாமலை அமராவதி முருகையன் நகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார், பள்ளி துணை ஆய்வாளர் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, திருவள்ளுவரின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். வான் சிறப்பு அதிகார திருக்குறள்களை வாசித்தனர். அதைெயாட்டி, பள்ளி மாணவிகள் அனைவருக்கும் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, ஒரு மாதம் தினமும் காலை இறைவணக்க கூட்டத்தில் வான் சிறப்பு அதிகார குறள்களை அனைத்து பள்ளிகளிலும் வாசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, கலெக்டர் கூறுகையில், மழை நீர் சேமிப்பு, இயற்கை வளங்களை பாதுகாத்தல், மழையின் அவசியம் மற்றும் சிறப்பு ஆகியவற்றை மாணவர்களிடம் கொண்டு செல்வதற்காகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து ஒரு மாதம் வான்சிறப்பு அதிகார குறள்களை வாசிக்கும் மாணவர்கள், தங்களுடைய வாழ்க்கையில் அதனை கடைபிடிக்க உதவியாக இருக்கும்' என்றார்.

Tags :
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 3...