விதை விற்பனையாளர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்

ஓமலூர், ஜூன் 25: சேலம், விதை ஆய்வு துறை சார்பாக, தனியார் விதை விற்பனையாளர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம் நடந்தது. சேலம், விதை ஆய்வு துறை சார்பாக, தனியார் விதை விற்பனையாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. முகாமிற்கு விதை ஆய்வு துணை இயக்குநர் நாசர் தலைமை வகித்து பேசுகையில், விதை விற்பனையாளர்கள் தரமான விதைகளை விற்பனை செய்ய வேண்டும். உரிய காலத்தில் விதை உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். விதை விற்பனை உரிமம் இல்லாமல் விற்பனை செய்தாலோ, தரமற்ற மற்றும் காலாவதி விதைகளை விற்பனை செய்தாலோ விதைச்சட்டம் 1966 மற்றும் கட்டுப்பாட்டு ஆணை 1983ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த முகாமில், விற்பனையாளர்களுக்கு விதை விற்பனை உரிமம் பெறுதல், உரிமம் புதுப்பித்தல், பதிவேடுகள் பராமரித்தல், உரிமங்களில் திருத்தம் செய்யும் வழிமுறைகள் மற்றும் இணையதளத்தில் பதிவு செய்தல் குறித்து தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்பட்டது. விதை விற்பனையாளர்கள் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகளான, விதை இருப்பு பதிவேடு, கொள்முதல் பட்டியல், விற்பனை பட்டியல், காலாவதி பதிவேடு, விதை மாதிரி ஆய்வறிக்கை பராமரித்தல், பதிவுச்சான்று பராமரித்தல் ஆகியவை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், வெளிமாநில விதைகளுக்கு படிவம் 2 பெற்றிருக்க வேண்டும் என்பது அறிவுறுத்தப்பட்டது. ஸ்பெக்ஸ் ஆன்லைன் மூலம் உரிமம் புதுப்பித்தல், பணி விதை மாதிரி அனுப்புதல் மற்றும் விற்பனை தடை பதில் அனுப்புதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

இதில், வேளாண்மை அலுவலர் தரக்கட்டுப்பாடு தமிழ்செல்வன் கலந்துகொண்டு, மக்காச்சோள பயிரில் படைப்புழு கட்டுப்படுத்துவது குறித்து எடுத்துரைத்தார். இதனை தொடர்ந்து சிஞ்ஜெண்டா நிறுவனத்திலிருந்து பிரகாஷ் படைப்புழு கட்டுப்படுத்துவது குறித்து செயல் விளக்கமளித்தார். ராசி விதை நிறுவனத்திலிருந்து ராஜவேலு பருத்தி இளஞ்சிவப்பு காய்ப்புழு கட்டுப்பாடு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் விதை ஆய்வாளர்கள் கிரிஜா, சம்பத்குமார், ரவிக்குமார், தீபா, பாபு, சரவணன் மற்றும் விதை விற்பனையாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்னர்.

Related Stories: