தாரமங்கலத்தில் வட்டார விவசாயிகள் ஆலோசனை கூட்டம்

ஓமலூர், ஜூன் 25: தாரமங்கலம் ஒன்றியத்தில், வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில், வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தாரமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 17 கிராம ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு, நடப்பாண்டில் செயல்படுத்தப்படும் வேளாண்மை திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் செல்லதுரை கலந்துகொண்டு திட்டங்கள் குறித்து பேசினார். இதில், கூட்டுப்பண்ணைய திட்டம், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் நன்மைகள், மானாவாரி தொழில்நுட்பங்கள் குறித்து பேசினார். மேலும், இதில், உள்மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி, கண்டுணர்வு சுற்றுலா, குழுதிறன் வளர்ப்பு பயிற்சி, உழவர் நண்பரின் பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம், நுண்ணீர் பாசனம், நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கம் ஆகியவை குறித்தும், தோட்டக்கலைத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், விவசாயிகளின் சந்தேகங்களுக்கு வேளாண்மைத்துறை அதிகாரிகள் கந்தசாமி, பிரேமா, முருகேசன் ஆகியோர் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து கால்நடை உதவி மருத்துவர் கண்ணன், கால்நடை பராமரிப்பு துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து தெரிவித்தார். இதே போல், பட்டுவளர்ச்சித்துறை, வேளாண்மை பொறியியல் துறை ஆகியவற்றில் செயல்படுத்தபடும் திட்டங்கள் குறித்தும் செயல்விளக்கம் அளித்தனர்.

Related Stories: