பனமரத்துப்பட்டி சுற்று வட்டாரங்களில் தண்ணீரில்லாமல் காயும் அரளிச்செடிகள்

சேலம், ஜூன் 25: பனமரத்துப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் போதிய தண்ணீர் இல்லாமல் அரளிச்செடிகள்,  காய்ந்து கருகி வருவது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.  சேலம் மாவட்டம் முழுவதும் பரவலாக அரளிச்செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்தவகையில் பல்வேறு பகுதிகளில் பறிக்கப்படும் அரளிப்பூ சேலம் வ.உ.சி., மார்க்கெட் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் மற்றப்பகுதிகளை காட்டிலும் பனமரத்துப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் அரளிச்செடி அதிகளவில் உள்ளது. இந்த பகுதிகளில் மட்டும் 4 ஆயிரம் மேற்பட்ட ஏக்கரில் அரளிச்செடிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி மாதத்தில் முதல் இன்றுவரை சேலம் மாவட்டத்தில் சரவர மழை இல்லாததால், போதிய தண்ணீர் அரளிச்செடி காய்ந்து கருகி வருகின்றன. இதை கண்டு விவசாயிகள் வேதனையடைந்து வருகின்றனர்.

இது குறித்து பூ விவசாயிகள் கூறுகையில்,‘‘ பனமரத்துப்பட்டி சுற்று வட்டார பகுதியில் இருந்து தம்மம்பட்டி வரை 4 ஆயிரம் ஏக்கரில் அரளிச்செடி சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு பல டன் அரளி பூ கிடைக்கின்றன. இதனால் விவசாயிகளுக்கு ஒரளவுக்கு வருமானம் கிடைத்து வந்தது. பொதுவாக அரளிச்செடி கோடையில் தான் நல்லமுறையில் விளைச்சல் தரும். கிணறு, போர்வெல்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், போதிய தண்ணீர் இல்லாமல் அரளிச்செடி காய்ந்து கருகி வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது,’’ என்றனர்.

Related Stories: