×

பள்ளிக்கு சென்றுவர பஸ் வசதி கோரி கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட மாணவிகள்

நாமக்கல், ஜூன் 25:  நாமக்கல் அருகே எருமப்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த வடவத்தூர், வரகூர், முட்டாஞ்செட்டி, ஜம்புமடை, செல்லிபாளையம் உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். ஆனால், போதிய போக்குவரத்து வசதியின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக ஜம்புமடை, வடவத்தூரிலிருந்து காலை நேரத்தில் மட்டும் பேருந்து வசதி உள்ளது. மாலை வேளையில் போதிய பேருந்து வசதி இல்லாததால் அவதிக்குள்ளான அப்பகுதியைச் சேர்ந்த மாணவிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர், மக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று கலெக்டர் ஆசியா மரியத்துடன் ஒரு மனு அளித்தனர்.
அதில், அவர்கள் கூறியிருப்பதாவது:மாலை 4.30 மணிக்கு பள்ளி விடப்படுகிறது. 4.30 மணியிலிருந்து 5.30 மணி வரையிலும் சிறப்பு வகுப்பு நடைபெறுகிறது. ஆனால், 4.15 மணிக்கு அரசு பேருந்து சென்று விடுகிறது. முன் கூட்டியே அரசு பேருந்து இயக்கப்படுவதால் குறிப்பிட்ட பேருந்தில் வீடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறோம். தொடர்ந்து அடுத்த பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால், வீடு திரும்ப நீண்ட நேரம் ஆகிறது. பேருந்தை தவற விட்டுவிட்டால் ஜம்புமடையில் இருந்து பள்ளிக்கு சைக்கிளில் வரவேண்டிய நிலை உள்ளது. அவ்வாறு வரும்வழியில் டாஸ்மாக் கடை உள்ளதால் அச்சத்திற்குள்ளாகி வருகிறோம். எனவே, கூடுதலாக பேருந்து போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : office ,collector ,school ,bus facility ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற...