துறையூர் புறவழிச்சாலையில் இரு புறமும் வேகத்தடை அமைக்க கோரிக்கை

துறையூர், ஜூன் 25: துறையூர் பகுதியில் புறவழிச்சாலையில் இருபுறமும் வேகத்தடை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.துறையூர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காக புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. இந்த புறவழிச்சாலை வழியாக நாமக்கல், கரூர், முசிறி பகுதியிலிருந்து பெரம்பலூர் வழியாக சென்னை செல்லும் வாகனங்கள் மற்றும் பிற மாநிலங்கள் செல்லும் கனரக வாகனங்கள் துறையூர் நகருக்குள் செல்லாமல் முசிறி பிரிவு ரோடு வழியாக புறவழிச்சாலையில் இயக்கப்படுகிறது. நெடுஞ்சாலைத்துறையினர் புறவழி சாலையில் சாலைகளை அகலப்படுத்தி தடுப்பு கட்டைகள் அமைத்துள்ளனர். இந்த புறவழி சாலையில் சென்டர் மீடியன் கட்டப்பட்டு ஒரு பகுதியில் மட்டும் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. பெரம்பலூரில் இருந்து துறையூர் நோக்கி வரும் வாகனங்கள் இந்த வேகத்தடை மீது ஏறிச்செல்லாமல் போக்குவரத்து விதியை மீறி எதிர் திசையில் செல்கின்றனர்.இதனால் எதிரே இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் பதட்டமடைந்து கீழே விழுந்து காயங்கள் ஏற்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனால் இந்த வேகத்தடையை இருபுறமும் போட வேண்டும். இல்லையெனில் ஒருபுறம் போடப்பட்ட வேகத்தடையை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வேகத்தடையை அகற்ற வேண்டும். இல்லையென்றால் இருபுறமும் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: