லால்குடி அருகே டாஸ்மாக் காவலாளி கொலை வழக்கில் 3 வாலிபர் கைது

லால்குடி, ஜூன் 25: லால்குடி அருகே டாஸ்மாக் காவலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.லால்குடி அடுத்த பூவாளூர்-பாடாலூர் சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் காவலாளியாக வேலைபார்த்து வந்தவர் பெருவளநல்லூர் வடக்கு புதுத்தெருவை சேர்ந்த தங்கராசு மகன் பாலையா (எ) நந்திராஜ் (54). கடந்த 20ம் தேதி இரவு டாஸ்மாக் கடையில் இரவு காவல் பணியில் இருந்தார். அன்றிரவு சிறுகனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பெருவளப்பூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றனர். அங்கு கடையினுள் டாஸ்மாக் பணியாளர் இருந்தைக் கண்டு மர்ம நபர்கள் அந்த கடையை விட்டு விட்டு பூவாளூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முடிவு செய்து காவலாளி பாலையாவை இரும்பு கம்பிகளால் தாக்கி கொலை செய்து விட்டு அங்கும் கொள்ளையடிக்க முடியாமல் தப்பியோடிவிட்டனர்.இந்நிலையில் இந்த கொலை சம்பவம் குறித்து லால்குடி டிஎஸ்பி ராஜசேகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் லால்குடி முத்துக்குமார், சிறுகனூர் ராஜா ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு லால்குடி, பெருவளநல்லூர், பெருவளப்பூர், புள்ளம்பாடி ஆகிய பகுதிகளில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை லால்குடி இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் லால்குடி- அன்பில் சாலையில் மணக்கால் ரெயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மொபட்டை வழிமறித்து சோதனை செய்தபோது சிறுகனூர் போலீஸ் சரகம் நெடுங்கூர் கிராமத்தை சேர்ந்த அசோக்குமார் மகன் அர்ஜூன் (21), அதே பகுதியை சேர்ந்த செல்வம் மகன் சவுந்தர்ராஜன் (20), பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூரை அடுத்த அய்யனார்புரம் காலனி தெருவை சேர்ந்த செல்வம் மகன் சந்துரு (19) ஆகிய 3 பேரும் தப்பியோடியபோது விரட்டிப்பிடித்து விசாரணை செய்ததில் பூவாளூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை காவலாளி பாலையா (எ) நந்திராஜை மூவரும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. சம்பவத்தன்று டாஸ்மாக் கடையில் காவலாளி பாலையாவை அர்ஜூன் உருட்டு கம்பியால் தாக்கியுள்ளார். இதில் பாலையா இறந்தது தெரிந்ததும் உடனே கொள்ளையர்கள் அங்கிருந்த கடையின் பூட்டை உடைக்க முயற்சி செய்தும் உடைக்க முடியாததால் தப்பியோடிவிட்டதாக ஒப்புக் கொண்டனர். முன்னதாக பெருவளப்பூர் டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும்சிறுசிறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளதும், கடந்த வாரம் கொப்பாவளி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை கொள்ளையடித்ததையும் கொள்ளை அடிக்கும் மது பாட்டில்களை லால்குடியை அடுத்த தச்சன்குறிச்சி பகுதியில் உள்ள வனப்பகுதியில் மறைத்துவைத்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து குடிப்பதும், மீதியை விற்பனை செய்து வந்ததாகவும் கூறினர். அதையடுத்து அர்ஜூன், சந்துரு, சவுந்தரராஜன் 3 பேரையும் லால்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: