அம்மன் கோயில்களில் கஞ்சி வார்த்தலுக்கு அரிசி, கம்பு வழங்ககோரி பேரணி

கும்பகோணம், ஜூன் 25: அம்மன் கோவில்களில் நடைபெறும் கஞ்சி வார்த்தலுக்கு அரிசி, கம்பு உள்ளிட்ட பொருள்களை இலவசமாக வழங்க வலியுறுத்தி கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் பேரணி நடந்தது.ரம்ஜான் பண்டிகையின்போது நடைபெறும் நோன்பு திறப்பதற்காக 4,500 மெட்ரிக் டன் அரிசியை தமிழக அரசு இலவசமாக வழங்கி வருகிறது. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் விரதமிருந்து அம்மனை வழிபட்டு வருகின்றனர். ஆடி மாதம் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் அம்மனுக்கு கஞ்சி வார்ப்பது, கூழ் ஊற்றுவது, பொங்கல் வைத்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

ரம்ஜான் பண்டிகைக்கு அரசு இலவசமாக அரிசி வழங்குவதுபோல் அம்மன் கோயிலில் நடைபெறும் கஞ்சி வார்த்தலுக்கும் அரிசி உள்ளிட்ட பொருட்களை இலவச வழங்க வலியுறுத்தி கும்பகோணம் கோர்ட் ரவுண்டானா அருகே இந்து மக்கள் கட்சி சார்பில் பேரணி நடந்தது. பின்ஙனர் அக்கட்சியினர் கும்பகோணம் உதவி கலெக்டர் அலுவலகம் வந்து கோரிக்கை மனு அளித்தனர். மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் கலியமூர்த்தி, மாணவரணி செயலாளர் லோகேஷ், மாணவரணி அமைப்பாளர் அரவிந்த் முன்னிலை வகித்தனர். இதில் திரளானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மாநில செயலாளர் பாலா செய்திருந்தார்.

Related Stories: