×

ஹஜ் பயணம் செல்லும் இஸ்லாமியர்களுக்கு தடுப்பூசி மானியம் வழங்க வலியுறுத்தல்

காரைக்கால், ஜூன் 25: காரைக்கால் யூனியன் பிரதேச போராட்ட குழு பொதுசெயாளர் அன்சாரிபாபு நிருபர்களுக்கு அளித்த பேட்டி:ஆண்டுதோறும் இந்திய நாட்டில் வாழும் இஸ்லாமியர்கள் அரசு ஹஜ் கமிட்டி மூலமாக ஹஜ் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரி மாநில வாழ் இஸ்லாமியர்கள் 84 பேர்கள் இந்த வருடம் புனித ஹஜ் பயணத்தை அரசு ஹஜ் கமிட்டியின் மூலம் விண்ணப்பித்து செல்ல உள்ளனர். இவர்களுக்கு அரசு தரப்பில் தடுப்பூசி போடப்பட வேண்டும். தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் செல்ல உள்ள 5 ஆயிரம் பயணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு, அரசு சார்பில் பயணிகளுக்கு மான்யம் வழங்குவதற்கான பூர்வாங்க பணி நடந்து வருகிறது. ஆனால் புதுச்சேரி அரசு ஹஜ் கமிட்டி சார்பில் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ள 84 பேர்களுக்கு இதுவரை தடுப்பூசி போடப்படுவதற்கான நடவடிக்கையும் இல்லை. அரசின் மானியம் வழங்கப்படுவதற்கான அறிவிப்பும் இல்லை. இதனால், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து புனித பயணம் மேற்கொள்ள உள்ள இஸ்லாமியர்கள் வருமா? வராதா? என தவித்து கொண்டு உள்ளனர். இது ஒரு புறமிருக்க, புதுச்சேரி மாநில ஹஜ் கமிட்டியின் நிர்வாக செலவிற்கு அரசு ஆண்டுதோறும் ரூ.8 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து வந்தது. தற்போது இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஏழு மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது வருந்ததக்கது. எனவே, புதுச்சேரி அரசு சிறுபான்மை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இவ்வருடம் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ள பயணிகளுக்கு தடுப்பூசி உடனே போடவும், கடந்த வருடம் போல இவ்வருடமும் புதுச்சேரி அரசின் மானியமும் வழங்கவும், புதுச்சேரி மாநில ஹஜ் கமிட்டி தேர்தல் நடத்துவதற்காக நடவடிக்கையை அரசு மெத்தன போக்கை காட்டாமல் விரைந்து எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Muslims ,Hajj ,
× RELATED நோன்பு கஞ்சி குடித்தபோது பல்செட்டை...