×

நாட்டு கோழிகளை கூண்டுக்குள் அடைத்து வளர்க்க கூடாது

நத்தம், ஜூன் 25: பண்ணையில் கூண்டுக்குள் அடைத்து நாட்டு கோழிகளை வளர்க்க கூடாது. இதனால் நஷ்டமே ஏற்படும் என கால்நடை பராமரிப்பு துறை முன்னாள் இயக்குநர் ராஜேந்திரன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது., ‘சுதந்திரமாக மேய்ச்சலுக்கு அலையும் நாட்டுக்கோழிகளை பண்ணைக்குள் கூண்டு முறையில் வளர்ப்பதால் ஒன்றையொன்று கொத்தி கொள்ளும். இவ்வாறு வளர்க்கப்படும் கோழிகளில் ஓங்கிய பண்பு கொண்ட கோழிகள் ஒடுங்கிய பண்பு கொண்ட கோழிகளை கொத்தும். ஒரு சில கோழிகளில் காணப்படும் இப்பழக்கம் இயற்கையானதாகும். எனினும் ஒரு கோழியை பார்த்து எல்லா கோழிகளும் இதனை பழகி கொள்ளும். இதில் காலை கொத்துவது, இறகுகளை பிடுங்குவது, தலையில் கொத்துவது, ஆசன வாய்ப்பகுதிகளில் கொத்தும் கோழிகள் என பலவகைகள் உண்டு.

நாட்டுக்கோழிகள் கொத்தி கொள்ளும் வழக்கத்தால் விற்பனையில் மிக பாதிப்பு ஏற்படும். இவைகள் புறக்கடையில் மேய்ச்சலுக்கு செல்லும் போது இரையை தேடி அலைவதால் ஒன்றையொன்று கொத்தி கொள்வதற்கு நேரம் கிடைக்காது. இக்கோழிகள் பகலில் 90 சதவீத நேரத்தை பச்சை தீவனங்களை தேடி உண்பதற்காகவே செலவழிக்கின்றன. அவ்வாறு உள்ள கோழிகள் கூண்டுக்குள் அடைத்து வளர்க்கும் போது தீவனம் தின்னும் நேரம் குறைவாக இருக்கும். மற்ற நேரங்களில் ஒன்றையொன்று கொத்தி கொள்ள ஏதுவாக இருக்கும். இவ்வழக்கத்தினை தவிர்க்க, வெவ்வேறு வயதுடைய கோழிகளை ஒன்றாக அடைத்து வைத்து வளர்க்க கூடாது. குறைந்த அளவு இடத்தில் அதிகளவு கோழிகளை பராமரிக்க கூடாது. தாய்க்கோழிகள் இல்லாமல் வளரும் குஞ்சுகளில் இப்பழக்கம் கூடுதலாகவே காணப்படும். மேலும் சேவல், கோழி இரண்டையும் தனித்தனியே பார்த்து வளர்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கொத்தி கொள்ளும் பழக்கம் குறைய வாய்ப்புகள் உண்டு.

கோழிகள் ஒன்றையொன்று கொத்தி கொள்ளும் வழக்கத்தை மாற்ற சிலர் கோழிகளின் மூக்கை வெட்டிவிடுவார்கள். அவ்வாறு செய்தால் சந்தை வியாபாரிகள் கோழிகளை குறைந்த விலைக்கு கேட்பார்கள். தாது உப்புக்கலவை மற்றும் வைட்டமின் சத்துக்களை சரியான விகிதத்தில் கொடுப்பது, ஒரு தொகுப்பில் ஒரே வயதுடைய கோழிகளை வளர்ப்பது, குருணை வடிவிலான தீவனங்களை தவிர்த்து மாவு போன்ற தீவனங்களை கொடுப்பது, தண்ணீர் வைக்கும் பாத்திரங்களை 40 முதல் 50 கோழிகளுக்கு ஒன்று என்ற விகிதத்தில் வைப்பது, அகத்தி, முருங்கை, வேலிமசால் மற்றும் வேப்ப இலைகளை தீவனமாக தருவது போன்ற பராமரிப்பு முறைகளை கையாள்வதால் கோழிகள் கொத்தி கொள்ளும் பழக்கத்தை கட்டுப்படுத்தலாம். எனவே நாட்டு கோழிகளை கூண்டு அடைத்து வளர்க்கும் முறை உகந்தது அல்ல’ என்றார்.

Tags :
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்