×

குறைந்த கட்டணத்தில் ஆட்டோ இயக்க கோரி கலெக்டர் அலுவலகத்தை மக்கள் முற்றுகை

ஊட்டி,  ஜூன் 25:  குைறந்த கட்டணத்தில் எல்க்ஹில் பகுதியில் இருந்து ஊட்டி  நகருக்கு ஆட்டோக்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள்  கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
 ஊட்டியில் இருந்து சுமார் 4  கி.மீ., தொலைவில் எல்க்ஹில் பகுதி உள்ளது. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட  குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள்  கூலி தொழிலாளர்கள். மலை உச்சியில் உள்ள இந்த பகுதிக்கு குறிப்பிட்ட  நேரத்தில் மட்டுமே டவுன் பஸ்கள் சென்று வருகிறது. பகல் நேரங்களில்  இப்பகுதிக்கு பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால், அப்பகுதி மக்கள் எந்த ஒரு  அவசர தேவைகளுக்கும் ஆட்டோக்கள் மூலமாகவே வந்து செல்ல வேண்டியுள்ளது.

 ஊட்டி  நகரில் இருந்து எல்க்ஹில் பகுதிக்கு செல்ல தற்போது ரூ.150 முதல் 200 வரை  கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. சாதாரண ஏழை கூலி தொழிலாளர்கள் இந்த  கட்டணத்தை கொடுத்து பயணம் செய்ய முடியாத நிலை இருந்தது.
இந்நிலையில்,  அப்பகுதி மக்களின் நலன் கருதி சில ஆட்டோ ஓட்டுநர்கள் குறைந்த கட்டணத்தில்,  அதாவது ரூ.90 வாங்கிக் கொண்டு நகர் பகுதிக்கு வந்து சென்று  கொண்டிருந்தனர். ஆனால், சில ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தை சேர்ந்தவர்கள் குைறந்த  கட்டணத்தில் ஆட்டோக்கள் இயக்க கூடாது. ரூ.150க்கு மேல் கட்டணம் பெற்றுக்  கொண்டு ஆட்டோக்களை இயக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இதனால்,  எல்க்ஹில் பகுதியில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் தற்போது குறைந்த கட்டணத்தில்  ஆட்டோக்களை இயக்குவதை நிறுத்தியுள்ளதாக தெரிகிறது.

 மேலும், ஊட்டி  நகருக்கு வர ரூ.150 முதல் 200 வரை கட்டணம் கேட்பதாக பொதுமக்கள்  தெரிவிக்கின்றனர். இதனால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும்  எல்க்ஹில் பகுதி மக்கள் நலன் கருதி மீண்டும் குறைந்த கட்டணத்தில்  எல்க்ஹில் பகுதியில் இருந்து ஊட்டி நகருக்கு ஆட்டோக்களை இயக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் என வலியறுத்தி பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். இது தொடர்பான மனு ஒன்றையும் மாவட்ட கலெக்டரிடம்  வழங்கினர்.

Tags : siege ,collector ,office ,auto run ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற...